ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து அவர்களுடனான சுதந்திரப்போரில் வெற்றிவாகை சூடியவரும், போர்க்களத்தில் ஈடு இணையற்ற வீரராகவும் திகழ்ந்த மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் – கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில், மாவீரன் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு. R.இசக்கிமுத்து, கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் திரு.A.P.S.ஆறுமுகசாமி, கழக இளைஞர் பாசறைபொருளாளர் திரு.A.S.முருகன் மற்றும் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட / வார்டு கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி / கிளைக் கழக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான துயரம் – விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் தேசிய மாணவர் படை (NCC) எனும் பெயரில் நடைபெற்ற போலி முகாமில் பங்கேற்ற 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கபட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் என்பவருக்கும் தேசிய மாணவர் படை(NCC)க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதும் அவர் போலி பயிற்சியாளர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேசிய மாணவர் படை முகாம் எனும் பெயரில் போலி முகாம்களை நடத்தி அதன் மூலம் பள்ளி மாணவியை வன்கொடுமைக்குள்ளாக்கிய சிவராமன் என்பவருக்கு, தனியார் பள்ளியில் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் என பலர் உடந்தையாக இருந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும்காலங்களில் இதுபோன்ற போலி முகாம்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மின்வாரியத்தில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கேங்மேன் தொழிலாளர்கள் போராட்டம் – கேங்மேன் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் நிலவும் 63 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளர்களாக நியமிப்பதோடு அவரவர் மாவட்டத்திலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பாக கேங்மேன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். கேங்மேன் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின்சார வாரிய நிர்வாகக் குழு அனுமதி வழங்கியும், அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தும் மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கே, தற்போது கேங்மேன் தொழிலாளர்கள் மாநில அளவில் திரண்டு போராடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. மழை, வெள்ளம், உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் காலங்களிலும் மக்களுக்கு தேவையான மின் விநியோகத்தை வழங்குவதற்காக தன் உயிரைப் பணயம் வைத்து இரவு, பகலாக பணியாற்றும் கேங்மேன் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள கேங்மேன் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய்த்தொற்று தமிழகத்திற்குள் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை அறிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனம், அனைத்து நாடுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை கவனத்துடன் பின்பற்றி குரங்கு அம்மை நோய்த்தொற்றை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்வதோடு, குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.