சென்னை திருவிடந்தை கடற்கரையில் விதிமுறைகளை மீறி ஆன்மீகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்க முடிவா ? – மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கடற்கரையில் 233 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீகம் மற்றும் கலாச்சார பூங்கா அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கடலோர ஒழுங்காற்று மண்டல விதிகளின் படி கட்டுமானங்கள் கட்டுவதற்கு தடை செய்யப்பட்ட (No Development Zone) கடலோரப் பகுதியில் திறந்தவெளி திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் என விதிமுறைகளை மீறி பல்வேறு கட்டுமானங்களை நிரந்தரமாக கட்டுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதாகவும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை மீது மீனவ கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆன்மீகம் மற்றும் கலாச்சார பூங்கா எனும் பெயரில் திருவிடந்தை கடற்கரை பகுதிகளில் கடலோர வளங்களை மட்டுமே நம்பி பன்னெடுங்காலமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மீனவ சமுதாய மக்களை வெளியேற்றத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திருவிடந்தை கடற்கரைப் பகுதிகளில் அதிகமாக காணப்படும் மணல்மேடுகளையும், குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறுகளையும் அகற்றி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் நிலத்தடி நீருடன் கடல் நீர் ஊடுருவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, மீனவ மக்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை உடனடியாக கைவிடுவதோடு, இனிவரும் காலங்களில் மீனவ சமுதாய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பொங்கல் பண்டிகையின் போது (CA) தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் – தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தேர்வுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர். எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.

வேலூரைத் தொடர்ந்து நீலகிரியிலும் பள்ளி செல்லும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் – பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக தொடர்ந்து நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம். நீலகிரி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை கடத்திச் சென்று 7 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வேலூர் அருகே 13 வயது சிறுமி போதைக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி அருகே நடைபெற்றிருக்கும் மற்றொரு பாலியல் கொடுமைச் சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதையே வெளிப்படுத்துகிறது. தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்ககத்தை கட்டுப்படுத்தவோ, அடியோடு ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, போதைப் பொருட்களை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் தடுப்பதற்காக தற்போது மேற்கொள்ளும் ஒத்திகை கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, வேலூர் மற்றும் நீலகிரியில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரக் கும்பல் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.