டிடிவி தினகரன்
அது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், புரட்சித்தலைவி அம்மா அவர்களை அரசியலுக்கு கொண்டுவந்த காலக்கட்டம். கல்லூரி விடுமுறை காலங்களில் சென்னை வந்த டிடிவி, தமது சித்தி திருமதி.வி.கே.சசிகலா மூலம் அம்மா அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். எளிமையானவராகவும், மனதில் சரியென பட்ட கருத்துகளைப் பளிச்சென முன்வைப்பவராகவும் இருந்ததால், குறுகிய காலத்திலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார் டிடிவி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1987ல் மறைந்த பிறகு, நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்குப் பக்கபலமாக இருந்த திருமதி.சசிகலா குடும்பத்தவர்களில் தினகரன் முக்கியமானவர். 1989 மீண்டும் ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை உருவாக்கியதால் இவர்களது பங்களிப்பு முதன்மையானது.
அரசியல் ரீதியான எதிரிகளினால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போது, அவரது சுற்றுப்பயணங்களில் நம்பிக்கைக்குரியவர்கள் உடன் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்காக பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டு அம்மா அவர்களுக்கு பாதுகாப்பாக தமிழகம் முழுக்க பயணித்தார் தினகரன். 1991 தேர்தலில் வென்று அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அம்மா அளித்த அரசியல் பணிகளைக் கவனித்தபடியே தனது சொந்த தொழில்களைத் தொடங்கி நடத்தினார்.
தினகரன் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக அம்மாவின் வழக்கறிஞருக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சதித்திட்டத்தின் இறுதிக்கட்டமாக அமைந்துவிட்டது. இதன் விளைவாக, 2007 ஆம் ஆண்டு, தாம் கூறும் வரை அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு அம்மா அவர்களால் அறிவுறுத்தப்பட்டார் தினகரன். இருந்தபோதும் அவரது மனைவி திருமதி.அனுராதா, ஜெயா டி.வியின் ஆலோசகராக 2011 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார்.
விசுவாசமிக்க தளபதியாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி, தமது தொழில்களைக் கவனித்தார் டிடிவி. ஆன்மீகத்திலும் புத்தக வாசிப்பிலும் நேரத்தைச் செலவழித்தார். அவை அவரது ஆளுமையை இன்னும் செறிவாக்கின.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து வந்த அம்மா அவர்கள் திடீர் மாரடைப்பினால் 5.12.2016 அன்று காலமான நெருக்கடியான நேரத்தில் டிடிவியின் அரசியல் ஓய்வுக்காலம் முடிவுக்கு வந்தது.
தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் தொடர் வேண்டுகோளுக்குப் பிறகு அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராகவும், சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் திருமதி.சசிகலா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தமக்கு உதவுவதற்காக அரசியல் அனுபவம் வாய்ந்த டிடிவி தினகரனை தேர்வு செய்தார்.
பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.சசிகலா முதலமைச்சராவது தடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு திடீரென தூசு தட்டப்பட்டு அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் தண்டனை அளிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் திடீரென ‘இரட்டை இலை’ சின்னத்தை முடக்கிய இந்திய தேர்தல் ஆணையம், டிடிவிக்கு ‘தொப்பி’ சின்னத்தை ஒதுக்கியது. இன்னொரு பக்கம், வருமான வரி சோதனை என்ற பெயரில் மிகப்பெரிய ‘ரெய்டு’கள் நடத்தப்பட்டன. இத்தகை சூழலில் தமது தனித்துவமான பிரச்சார உத்திகளால் தேர்தல் களத்தில் டிடிவி தினகரன் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த நேரத்தில், இடைத்தேர்தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
இதைத்தொடர்ந்து வெளியில் இருந்து சில சக்திகள் கொடுத்த அழுத்தத்தினால் திருமதி.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு உடனிருந்தோரே துரோகம் இழைத்தனர்.
டெல்லி போலீசார் திடீரென தினகரனை கைது செய்தனர். தேர்தல் ஆணையத்தின் அடையாளம் தெரியாத அதிகாரி ஒருவருக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு நூதன வழக்கு போடப்பட்டது அப்போதுதான் என்று சட்ட வல்லுனர்கள் கூறினார்கள். தமிழகம் முழுக்க டிடிவியை விடுதலை செய்யக்கோரி தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்தன.