சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் ட்ராப் பிரிவில் கழக அமைப்புச் செயலாளர் திருமதி.சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிய போட்டிகளைப் போலவே அடுத்த ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள் தங்கம் வென்று சாதனை படைக்கவும், தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வரும் மூன்று வகையான ஆசிரியர் அமைப்புகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. திமுக தேர்தல் வாக்குறுதியான 177 -ன்படி மறுநியமனப் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், வாக்குறுதி 181-ன் படி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்களும், வாக்குறுதி 311ல் கூறியிருப்பது போல சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு இதுவரை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மீண்டும் நடைபெற்று வரும் போராட்டம் மூலமாகவே தெரியவருகிறது. ஆசிரியர்களின் போராட்டம் ஒரு வாரத்தை கடந்திருக்கும் நிலையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொடர்போராட்டத்தில ஈடுபட்டுள்ள ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த எட்டு பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசியில் இருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் தென்காசி திரும்பும் போது குன்னூர் அருகே எதிர்பாராத விபத்தில் பேருந்து சிக்கி 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதோடு, விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், ஸ்குவாஸ் போட்டியின் மகளிர் அணி பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கும் ஜோஷ்னா சின்னப்பா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய அளவிலான போட்டிகள் மட்டுமல்லாது உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க இவ்விருவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவரும், உணவு உற்பத்தியில் இந்தியா இன்று அடைந்திருக்கும் தன்னிறைவுக்கு முக்கிய பங்காற்றியருமான வேளாண் விஞ்ஞானி பத்மஸ்ரீ திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த வேளாண் அறிவியல் உலகுக்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பாரம்பரிய விளைநிலத்தில் தனது நவீன கனவுகளை விதைத்து, உணவு உற்பத்தியில் இந்தியாவை ஒரு புதிய சகாப்தம் படைக்க செய்ததோடு, உணவிற்காக உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இருந்த இந்தியாவை, தனது பசுமைப் புரட்சியின் மூலம் மாற்றிக் காட்டிய மகத்தான மனிதர் என அனைவராலும் போற்றக்கூடியவர் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள். வேளாண்மையில் விஞ்ஞானத்தை புகுத்தி சாதனை படைத்த இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள், இந்திய நிலப்பரப்பில் ஏற்படுத்திய சாதனைகளும் அவர் மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சிகளும் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.