நாடு முழுவதும் அமலுக்கு வந்த ஜி எஸ் டி வரிக்குறைப்பு ஆவின் நிர்வாகத்தில் மட்டும் இன்னும் அமலுக்கு வராதது ஏன் ? – ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரிக்குறைப்பை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.நெய், வெண்ணெய், பன்னீர் போன்ற பால் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்கப்படும் பால் பொருட்கள் முந்தையவரிவிதிப்பின் அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜி எஸ் டி வரிக்குறைப்பின் மூலம் நெய் கிலோ ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் வரையிலும், வெண்ணெய் சுமார் 40 ரூபாய் வரையிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவின் பாலகங்களில் பால் சார்ந்த பொருட்கள் விலைகுறைப்பின்றி விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.ஜி எஸ் டி வரிக்குறைப்பின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தில் காலதாமதமாக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவே,ஜி எஸ் டி வரிக்குப்பை தமிழகத்தில் அமல்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பொதுமக்களுக்கு எந்தவித கால தாமதமுமின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் ஜி எஸ் டி வரிக்குறைப்பு இன்று முதல் அமல் – மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீர்திருத்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்க்கையில் பேருதவியாக அமைந்திருக்கும் மத்திய அரசின் ஜி எஸ் டி வரிக்குறைப்பு நடைமுறை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகள், தனி நபர் மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு முழுமையான வரி விலக்கு, சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கல்வி சார்ந்த உபகரணங்களுக்கு வரிக்குறைப்பு நான்கு அடுக்குகளாக இருந்த வரிவிதிப்பு நடைமுறை இரண்டு அடுக்குகளாக மாற்றம் உள்ளிட்ட ஜி எஸ் டி வரிவிதிப்பில் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியது. பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் தீபாவளிப் பரிசாக ஜி எஸ் டி வரி குறைப்பில் புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்தியிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை – குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றிய கழக முன்னாள் இணைச்செயலாளர் மறைந்த திரு.இராம.சேகரன் அவர்களின் புதல்வர் திரு ராம்பிரகாஷ் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இந்த படுகொலைச் சம்பவம் அப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தையும், பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரு ராம்பிரகாஷ் அவர்களின் கொலை வழக்கில் தொடர்புடையதாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்திற்குக் காரணமான அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உறவினர்களும் பொதுமக்களும் பல்வேறுகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.