எனது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் அன்புச் சகோதரருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள், முன்னாள் அமைச்சரும் அன்புச் சகோதரருமான திரு.வைத்திலிங்கம் அவர்கள், திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்கள், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத் தம்பி திரு.ரவீந்திரநாத் அவர்கள், தமிழ்நாடு ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் D.கணேசன், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர்களுக்கும் மற்றும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பாசத்திற்குரிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மக்கள் பிரதிநிதிகள் மீது புகைகள் கக்கும் கருவியை வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த 4 பேர் திடீரென தடுப்புகளைத் தாண்டி அவைக்குள் குதித்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி வண்ண புகைகளை வெளியேற்றக்கூடிய கருவிப் பொருட்களை வீசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் இந்நாளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று நடைபெற்றிருக்கும் பாதுகாப்பு மீறல் சம்பவம் மக்கள் பிரதிதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பன்னடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரணத் தொகை முழுமையாக சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். புயல் கடந்து சென்றாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வடியாமல் இருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம். புயல், வெள்ள பாதிப்பால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க அரசு அறிவித்திருக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை போதுமானதாக இருக்காது என பொதுமக்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் நிவாரணத் தொகை ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இன்றி முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வியும் அச்சமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமல்லாமல், குடும்ப அட்டை இல்லாதவர்கள், குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், வீடுகளின்றி சாலையோரங்களில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதோடு, குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பெரிதினும் பெரிது கேட்கும் ஆர்வம் கொண்டிருப்பதும், வையத்தலைமை கொள்ளும் மானுட பண்பை பெற்றிருப்பதும் வாழ்க்கையின் பெரும் பயன்கள் என்றுரைத்து புரட்சிகரமான கவிதைகள் மூலம் மக்கள் மனதில் தமிழ் உணர்வோடு விடுதலைஉணர்வையும் விதைத்த சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்இன்று. பெண்களின் உரிமைக்கும் கல்விக்கும் முக்கியத்துவம்அளித்து முதன்முதலாக குரல் எழுப்பியதோடு, அரசியல் களம், நாட்டின் விடுதலையில் தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த முண்டாசு கவிபாரதியாரை இந்நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் போற்றி கொண்டாடுவோம்.

“மக்களால் நான் மக்களுக்காகவே நான்” எனும் தாரக மந்திரத்தை தன் வாழ்க்கையாக கொண்டு நாடு போற்றும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று. அடக்குமுறைகள் ஆயிரம் வழியில் வந்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்ட அம்மா அவர்களின் வழியில் பயணித்து அவரின் லட்சியங்களை மீட்டெடுப்பதோடு, தீய சக்தியையும், துரோகக் கூட்டத்தையும் அடியோடு அகற்ற அம்மா அவர்களின் நினைவுநாளில் உறுதியேற்போம்.

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னை நோக்கி இன்றே புறப்பட இருப்பதை நான் அறிவேன். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையாலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையாலும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களின் பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மாறாக, அவரவர் வசிக்கும் பகுதிகளில் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, துரோக கூட்டத்தை அகற்றி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க உறுதியேற்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.