திருவண்ணாமலை அருகே மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விபத்து – தரமற்ற கட்டடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள முன்னூர் மங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. 15 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்திருப்பது ஒட்டுமொத்த கட்டடத்தின் உறுதித் தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மேற்கூரை பெயர்ந்து விழுந்த அசாதாரண சம்பவத்தின் போது நல்வாய்ப்பாக குழந்தைகள் யாரும் இல்லாதது நிம்மதியை அளித்தாலும், தமிழகத்தின் பல்வேறு அரசுப்பள்ளிகளில் கட்டப்பட்டிருக்கும் தரமற்ற கட்டடங்களின் மேற்கூரைகள் தொடர்ந்து பெயர்ந்து விபத்துக்குள்ளாவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, தரமற்ற கட்டடங்களை கட்டிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி கட்டடங்களை ஆய்வுக்குட்படுத்தி அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது ? பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அம்மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இன்று மீண்டும் 13 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பாக இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

சுற்றுலாத் துறையின் முன்னோடியாக திகழ்ந்த மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.VKT பாலன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய திரு.VKT பாலன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற அறிவுறுத்தியதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி தொடர்புடைய கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேனாறும், பாலாறும் ஓடும் என்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளை கடந்த பின்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 24 மாதகால அகவிலைப்படியில் தொடங்கி ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் வரை அனைத்தையும் முடக்கிய திமுக அரசு, காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களைக் கூட நிரப்பாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவது அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசுவார் என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயாராக இருப்பதாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வெளிப்படையாகவே அறிவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், இனியும் மறுக்கும் பட்சத்தில் அதற்கான விளைவை அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள்ள நேரிடும் என திமுக அரசுக்கும், அதன் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைகள், தொலைக்காட்சி தொடர்களை எழுதி வந்த பிரபல எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பிரபல திரைப்பட மூத்த நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. நாடக நடிகராக அறிமுகமாகி திரைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை தக்க வைத்திருந்த திரு.டெல்லி கணேஷ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.