மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்; தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைப்பது, அக்கூட்டணி மீதும், மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களின் மீதும் நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைத்து, வலுவான கூட்டணியை அமைத்து, அதன் மூலம் வெற்றிக்கான சிறந்த அடித்தளத்தை அமைத்த மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்த நாட்டு மக்களுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி சாதனை படைத்த மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி மென்மேலும் தொடர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு ஓய்வின்றி உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, உலக அரங்கில் இந்தியாவை மேலும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த தேனி மற்றும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, நண்பனாக, சகோதரனாக என்னை நேசிக்கும் தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் அனைவர் மீதும் கொண்டிருக்கும் அன்பு சாம்ராஜ்யம் என்றென்றும் தொடரும். பணம், பரிசுப் பொருட்கள், அதிகார துஷ்பிரயோகம், அவதூறுகளை கடந்து அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உண்ண மறந்து, உறக்கம் தொலைத்து தன்னலம் கருதாமல் கழகத்திற்காக ஒவ்வொரு நொடியும் உழைத்த என் உயிரினும் மேலான தொண்டர்களுக்கும் அனைத்து நிலையிலான நிர்வாகிகளுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தற்காலிக தடைகளையும் தாண்டி நம் பயணம், நாம் கொண்டிருக்கும் லட்சியத்தை அடையும் வரை உறுதியாக தொடரும். என்றென்றும் உங்களோடு இருப்பேன்… எப்போதும் உங்களுக்காகவே உழைப்பேன்…

முதலமைச்சரின் தனிப்பிரிவில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்களால் ஊழியர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமை – அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை நிரப்பும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்போது ? பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டிய முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் பிரிவு அலுவலர், தட்டச்சர், உதவியாளர் என 40 சதவிகிதம் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் முதன்மை அமைச்சரான முதலமைச்சரின் அலுவலகத்திலேயே காணப்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வராத திமுக அரசு, மற்ற துறைகளில் காலியாக இருக்கும் லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்களை எப்படி நிரப்பும் ? என்ற கேள்வி பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது. அரசுப் பணியை எதிர்பார்த்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் மிகக்குறைவான காலிப்பணியிடங்களோ யானைப்பசிக்கு சோளப்பொரி என்பது போல் அமைந்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 187வதாக இடம்பெற்றுள்ள தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3.5 லட்சம் இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்படாத காரணத்தினால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் சேவைகளும் உரிய நேரத்தில் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் நிலவக்கூடிய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழக இளைஞர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது ? – உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தீவிரப்படுத்தி இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்திற்கு சாதகமான தீர்ப்பினை தமிழக அரசு பெற வேண்டும். தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அண்மைக்காலமாக போதைப் பொருட்களின் பழக்கம் அதிகரித்துவருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கும் அடிமையாகி பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர், காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரி மாணவர், கும்பகோணம் தனியார் விடுதி மேலாளர் என ஐந்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய சட்டப்பிரிவுகளை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவுப்படுத்த தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரப்படுத்துவோர் மற்றும் தொடர்புடைய விளம்பர நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை போலவே பயனற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனியும் அலட்சியமாக செயல்படாமல் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை விரைவு படுத்துவதோடு, அவ்வழக்கில் வலுவான வாதங்களை முன்வைத்து ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற்று இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய அப்பாவி மக்களுக்கு அரங்கேற்றப்படும் அவலங்கள் – முழுவதுமாக செயலிழந்துவிட்ட சுகாதாரத்துறையை மீட்டெடுத்து சீரமைப்பது எப்போது ? ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் (Stecher) வழங்க அலைக்கழித்த காரணத்தினால், சிகிச்சைக்காக வந்த மூதாட்டியை அவரின் மகளே தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதியின்மை, மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, என எழும் தொடர் புகார்களை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி அலைக்கழிக்கப்படும் அவலச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர், விளம்பரத்தில் மட்டுமே அதீத ஈடுபாடு கொண்டிருப்பதால் இனியும் அரசு மருத்துவமனைகளை நம்பி பயனில்லை என்ற சூழலுக்கு அடித்தட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவையான மருத்துவ வசதியை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, செயலிழந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுத்து சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.