இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த பெருமைக்குரிய மருத்துவர் திரு.கே.எம்.செரியன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இதய அறுவை சிகிச்சை துறையில் வியக்கத்தக்க சாதனைகள் பல புரிந்த மருத்துவர் திரு.கே.எம்.செரியன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக மருத்துவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எல்லை தாண்டியதாக கூறி ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது – இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கும் அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது ? ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாருக்கு இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 33 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையினர், அவர்களின் மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக மீன்பிடிக்கும் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அத்துமீறி கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போதும், எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன்னுடைய கடமை முடிவடைந்துவிட்டதாக கருதும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால், நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படும் நாளில் கூட கண்ணீரில் மூழ்கியிருக்கும் சூழல் நிலவுவதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் நீண்டகாலமாக வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நடிகர் திரு.அஜித்குமார், தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி செட்டி, நடன கலைஞர் திருமதி. ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளின் கீழ் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தினமலர் திரு.லட்சுமிபதி ராமசுப்பையர், திரு.வேலு ஆசான், திரு.குருவாயூர் துரை, திரு.தாமோதரன், திரு. M D ஸ்ரீனிவாஸ், திரு.புரசை கண்ணப்ப சம்பந்தன், திரு. அஸ்வின் ரவிச்சந்திரன், திரு.சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, திரு.சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன். மத்திய அரசின் உயரிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்தி மகிழ்கிறேன்.

இறந்த தாயின் உடலை சைக்கிளில் 18கி.மீ எடுத்துச் சென்ற மகன் – திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலை, அவரது மகன் சைக்கிளில் 18 கிலோ மீட்டர் எடுத்துச் சென்றிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டதே அந்த மூதாட்டி உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களை குணப்படுத்த வேண்டிய மருத்துவர்களே, எதாவது காரணத்தை கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது மனிதநேயமற்ற செயலாகும். திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற செயல்கள் இனியும் தொடராத வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போதுமான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சிவகங்கை அருகே அரசுப்பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு – அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கணினி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர் உயிரிழந்த சம்பவத்தை பெற்றோர் உட்பட யாருக்கும் தெரியப்படுத்தாமல் நீண்ட நேரம் மூடி மறைக்கும் முயற்சியில் அரசுப்பள்ளி நிர்வாகம் ஈடுபட்டதாகவும், அது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, அரசுப்பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் தொடங்கி அனைத்து விதமான கட்டடங்களும், உபகரணங்களும் பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இந்த துயரச்சம்பவம் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இச்சம்பவத்தில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் – வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.