தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது – அரசுத்துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன ? தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்ற நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு மாதம் கடந்தும் சுமார் நான்காயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. போட்டித் தேர்வில் மட்டுமல்லாது நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற பழனிசாமி அரசில் கொண்டுவரப்பட்ட நடைமுறையையே பின்பற்றி தேர்வை நடத்தியதோடு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வோ, அதன் மூலம் பணி நியமன ஆணையோ வழங்கப்படாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள சுமார் நான்காயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்துடன் போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து துறைகளிலும் நிலவும் லட்சக் கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசும் அதன் அமைச்சர்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பது அரசுப்பணியை எதிர்பாத்து காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்காயிரம் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்குவதோடு, அரசுத்துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை – தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் நடைபெற்ற சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. சாராய விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே ஜாமீனில் வெளிவந்து மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை இளைஞர்கள் தட்டிக் கேட்டதாலே இந்த படுகொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் என அனைத்து வகையிலான குற்றச் சம்பவங்களில் கைதாகும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தராததும், ஜாமீனில் வெளியே வருவோரை கண்காணிக்கத் தவறியதுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இளைஞர்களை படுகொலை செய்த சாராய வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதோடு,இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை இனியாவது தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு என புகார் – அடியோடு சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது ? திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. இதே மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் சுமார் 15 கி.மீ தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம் நடைபெற்ற நிலையில், தற்போது தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது அம்மருத்துவமனையின் அலட்சியப் போக்கு தொடர்வதையே வெளிக்காட்டுகிறது. அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்களை தட்டுப்பாட்டை பலமுறை சுட்டிக் காட்டியும் அதனை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையே அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருவதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே, சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே தங்கு தடையின்றி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் – மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களுக்கு அடியோடு முடிவு மறுக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் புகையிலை, போதை சாக்லெட் உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏராளமான மாணவ, மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை தொலைத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய திமுக அரசால், ஏற்கனவே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை கூட தடுக்க முடியவில்லை என்பது அரசு நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறையும், காவல்துறையும், அத்துடன் அதனை கடந்து விடுவதும் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்ளாமல் விடுவதுமே கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது. பள்ளிக்குழந்தைகள் தன்னை அப்பா… அப்பா… என அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைவதாக பெருமிதமடையும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அக்குழந்தைகள் பயிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்குதடையின்றி நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அப்பாவாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் ? என மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மாணவ சமுதாயத்தை சீரழித்து வரும் போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை இனியாவது தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.