வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் ஆபத்தான எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பங்கிங்காம் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டு எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் மழைநீரில் CPCL நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதால் கடல்வளம் மட்டுமல்லாது பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. எர்ணாவூர், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்களால் சுவாசிக்கவே சிரமமாக இருப்பதாகவும், அதனை அகற்ற இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வடசென்னை பொதுமக்களையும், கடல்வளத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி உள்ளூர் மீனவர்களை ஈடுபடுத்தியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடலின் மேற்பரப்பு பகுதிகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்கள் அகற்றப்பட்டாலும் அதனுடைய தாக்கம் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கும் எனவும், அதுவரை மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலிக்க வேண்டும். எனவே, எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதோடு, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி கூடுதல் எண்ணெய் மிதவைகள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் 17ஆம் தேதிக்குள்ளாக எண்ணெய் படலங்களை அகற்றும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் 140 பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட இருந்த விலையில்லா மடிக்கணிகள் திருடு போனதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதுவரை 140 பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கக் கூடிய விவரங்களை பதிவு செய்துள்ளார். ஏழை, எளிய மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த இதயதெய்வம் அம்மா அவர்கள், பள்ளிக்கல்வி மட்டுமல்லாது உயர்கல்வி சார்ந்த தேடல்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாண்புமிகு அம்மா அவர்கள் தொடங்கிய இந்த பொன்னான திட்டத்தை ஆட்சிக்கு வந்தபின் சரிவர செயல்படுத்தாத திமுக அரசின் அலட்சியப் போக்கால், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணிகள் திருடுபோனதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமான விலையில்லா மடிக்கணினி திட்டத்தை இனிவரும் காலங்களில் முறையாக செயல்படுத்துவதோடு, மடிக்கணினிகள் வைத்திருக்கும் அறையை சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நேற்று எனது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கிய என் உயிரினும் மேலான கழக நிர்வாகிகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும், பிற மாவட்டங்களில் முதியோர் மற்றும் ஆதவற்ற குழந்தைகளுக்கான இல்லங்களில் நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு இடங்களில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் அன்னதானத்தையும் கழகத்தினர் வழங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது. என்னுடைய பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு செய்திருக்கும் இந்த உதவி எந்நாளும் தொடர வேண்டும் என்பதை இந்நேரத்தில் கழகத்தினருக்கு அன்பு வேண்டுகோளாய் வைக்கின்றேன்.

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்திற்குள் வந்த தமிழ்நாட்டு பெண் பயணியிடம், இந்தி தான் தேசிய மொழி, இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மிரட்டும் தொணியில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல்வேறு மொழிகளைப் போல இந்தியும் ஒரு அலுவல் மொழியே தவிர தேசிய மொழி கிடையாது என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படும் வீரர்கள் இந்தி பேசச்சொல்லி பயணிகளை கட்டாயப்படுத்துவதாக வரும் செய்திகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியிருக்கும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை அனைவரும் மீண்டும் உணர வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, கோவா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்து மொழிகளுக்கும் உண்டான மரியாதை வழங்குவதை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை பறிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் உட்பட பல்வேறு உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது; காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். குரூப் 1, 2 மற்றும் 4 உள்ளிட்ட தேர்வுகள் மூலம் அரசுத்துறைகளின் அடிமட்ட பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை தேர்வு செய்யும் தேர்வாணையத்திற்கு தலைவர் உட்பட பல்வேறு உறுப்பினர்களின் பதவியிடங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமலே இருப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயலாகும். ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுவோரின் காலிப்பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசுப் பணிக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையும் 65 லட்சத்தை தாண்டியிருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது. தேர்வாணைய செயலாளர் திடீர் மாற்றம், அட்டவணை அறிவித்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம், தேர்வு நடத்துவதில் குழப்பம் என பல்வேறு புகார்களில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சிக்கித் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நவம்பர் மாதம் வெளியாக வேண்டிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை தற்போது வரை வெளியிடப்படாத சூழலில், மேலும் தாமதமாகுமோ என்ற அச்சம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், குரூப் 2 தேர்வுகள் நடைபெற்று பத்து மாதங்கள் கடந்த நிலையிலும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பதும், அக்டோபர் மாதம் வெளியிட வேண்டிய 2024 ஆம் ஆண்டு தேர்வு அட்டவணை தற்போது வரை வெளியாகாமல் இருப்பதும் தேர்வர்களுக்கு தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. எனவே, அரசுப்பணிக்காக முயற்சிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தில் அலட்சியம் காட்டாமல், டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர், செயலாளர் உட்பட அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதோடு, தேர்வு அட்டவணை தொடங்கி பணி நியமனம் வரையிலான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் முடிக்கும் வகையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் அன்புச் சகோதரருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள், முன்னாள் அமைச்சரும் அன்புச் சகோதரருமான திரு.வைத்திலிங்கம் அவர்கள், திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்கள், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத் தம்பி திரு.ரவீந்திரநாத் அவர்கள், தமிழ்நாடு ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் D.கணேசன், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர்களுக்கும் மற்றும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பாசத்திற்குரிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மக்கள் பிரதிநிதிகள் மீது புகைகள் கக்கும் கருவியை வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த 4 பேர் திடீரென தடுப்புகளைத் தாண்டி அவைக்குள் குதித்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி வண்ண புகைகளை வெளியேற்றக்கூடிய கருவிப் பொருட்களை வீசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் இந்நாளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று நடைபெற்றிருக்கும் பாதுகாப்பு மீறல் சம்பவம் மக்கள் பிரதிதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பன்னடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரணத் தொகை முழுமையாக சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். புயல் கடந்து சென்றாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வடியாமல் இருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம். புயல், வெள்ள பாதிப்பால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க அரசு அறிவித்திருக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை போதுமானதாக இருக்காது என பொதுமக்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் நிவாரணத் தொகை ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இன்றி முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வியும் அச்சமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமல்லாமல், குடும்ப அட்டை இல்லாதவர்கள், குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், வீடுகளின்றி சாலையோரங்களில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதோடு, குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.