சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரி தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக ஆளுநர் அவர்களை வலியுறுத்துகிறேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவைக் குழுவில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆளுநர் அவர்கள் கையெழுத்திட மறுப்பது சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். இந்திய சுதந்திரத்திற்காக, விவசாயிகளுக்காக, அடித்தட்டு ஏழை மக்களுக்காக, தீண்டாமை கொடுமைக்கு எதிராக என தன் வாழ்நாள் முழுவதையுமே போராட்டம் நடத்தியும் சிறைக்கு சென்றும் கழித்த தோழர் சங்கரய்யா அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு கௌரவ பட்டம் வழங்கும் கோப்பில் உடனடியாக கையெழுத்திடுமாறு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து நேரடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடம் பிரச்னைக்குரிய அரசாணை எண் 149ஐ ரத்து செய்வதற்கான வாக்குறுதியை அளித்துவிட்டு தற்போது அதே அரசாணையின் படி 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்திருப்பது ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திமுக தேர்தல் அறிக்கை எண் 177ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றத் தயங்குவது ஏன்? என்ற கேள்வியையும் ஆசிரியர்கள் எழுப்புகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே கூடுதல் கவனம் செலுத்தி, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. விஜயநகர மாவட்டம், கண்டகப்பள்ளி ரயில் நிலைய பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது அவ்வழித்தடத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவில் தற்போது நடைபெற்றுள்ள இந்த விபத்தினால் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசும், ரயில்வே துறையும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் கண்டனத்திற்குரியது. இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், தற்போது மேலும் 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. ஆகவே, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னையை உணர்ந்து, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, மீனவர்கள் எந்த விதமான அச்சமுமின்றி மீன்பிடித் தொழிலைச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.