திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கித் தவிப்பு – மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலை உச்சியில் இருந்த பாறைகள் உருண்டு அடிவாரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் விழுந்ததில் 7 பேர் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மண்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். புயல் கரையை கடந்த நிலையிலும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறுகிய கால இடைவெளியில் கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முழுமையாக முடங்கியுள்ளது. எனவே, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மண்சரிவில் சிக்கியிருக்கும் 7 பேரையும் பாதுகாப்பாக மீட்பதோடு, கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஏதுவாக உரிய நிவாரணத் தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தொடர் கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்திருக்கும் மழைநீர் – இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு உதவ கழகத்தினருக்கு அன்பான வேண்டுகோள்! ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதோடு, பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற அத்தியாவசிய உதவிகளை செய்துத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

வாடகை கட்டடங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெற வேண்டும் – ஏற்கனவே மாநில அரசால் நலிவடைந்து வரும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் கட்டடங்களுக்கான வாடகை மீது விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசால் ஏற்கனவே பலமுறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வாலும், அதிகரிக்கப்பட்ட சொத்து வரியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வணிக நிறுவனங்களின் கட்டடங்களின் வாடகை மீது 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது போல் அமைந்திருக்கிறது. எனவே, வணிக நிறுவனங்களின் கட்டடங்களின் வாடகை மீது விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்து, நலிவடைந்து வரும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை – ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக காவல்துறையை கொண்டிருப்பதாக பெருமை பேசும் முதலமைச்சர், அந்த காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே பயன்படுத்துவதே ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான முக்கிய காரணம். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேலமலை கவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை படுகொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து பணம், நகைகளை அடையாளம் தெரியாத கும்பல் திருடிச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, தற்போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மூவரை கொலை செய்யும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உலக அளவில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையை கொண்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பெருமை பேசி முடித்த இரு தினங்களுக்குள்ளாக நடைபெற்றிருக்கும் இந்த கொலைச் சம்பவங்கள் முதல்வரின் தலைமையில் இயங்கும் தமிழக காவல்துறை முற்றிலும் செயலிழந்து ஏவல் துறையாக மட்டுமே செயல்படுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, இந்த படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துவதை தவிர்த்து சட்டம் ஒழுங்குகளை சீரமைக்கும் வகையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் ஒன்றில் மருத்துவர்களை தரக்குறைவாக பேசிய சுகாதாரத்துறை உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறை, தன்னலம் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்களையும் தரக்குறைவாக நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தியிருப்பது, வடகிழக்கு பருவமழை நேரத்தில் அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய பொதுமக்களையும், நோயாளிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவர்களின் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.