தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வானகரம், பரனூர், செங்கல்பட்டு, சூரப்பட்டு உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே அளவிற்கு அதிகமாகவும், காலாவதியான நிலையிலும், செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அதற்கு மாறாக தொடர்ந்து சுங்கக் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். தமிழகத்தில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தோடு, கூடுதலாக ரூ.5 முதல் ரூ.75 வரை வசூலிக்கும் பட்சத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து சாமானிய மக்கள் மென்மேலும் சிரமத்திற்குள்ளாகும் சூழல் உருவாக கூடும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வணிகர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, காலாவதியான நிலையில் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

யுகாதி புத்தாண்டு திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மலரும் இப்புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரின் வாழ்வில் வளத்தையும், வசந்தத்தையும் வழங்கும் ஆண்டாகவும், அனைவரிடத்திலும் ஒற்றுமை மற்றும் நட்புணர்வு மென்மேலும் தழைத்தோங்கும் ஆண்டாகவும் அமையவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு மீண்டும் ஒருமுறை எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்.

உசிலம்பட்டியில் மதுபானக்கடை அருகே காவலர் கல்லால் அடித்துக் கொலை – தமிழகத்தை கொலைக் களமாக மாற்றிவரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக காவலர் திரு.முத்துக்குமார் அவர்கள் அடையாளம் தெரியாத சில நபர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக பொதுவெளியில் நடமாட முடியும்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நாள் தவறாமல் நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு எதாவது ஒரு காரணத்தையும் கட்டுக்கதைகளையும் அடுக்கி அதன் பின்னால் மறைந்து கொள்ளும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த படுகொலைக்கு என்ன கதை சொல்லப் போகிறார்? எனவே, ஒவ்வொரு கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கும் காரணம் தேடி நேரத்தை வீணடிக்காமல், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.