கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த திரு.விஜயக்குமார் ஐ.பி.எஸ் தற்கொலை செய்து கொண்ட செய்தி வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக திறம்பட பணியாற்றி வந்தவர் திரு. விஜயகுமார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக காவல்துறை அதிகாரிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உரிய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் நிலையில் பிரச்னைகளுக்கு தற்கொலை ஒன்றே தீர்வு அல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும். அதே நேரத்தில் காவல்துறையில் நிலவும் பணி சுமையை குறைக்கவும், காவல்துறையினருக்கு உரிய ஓய்வு அளிக்கவும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை காவல்துறையினருக்கு உரிய உடல், மன நல ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தருணத்தில் வலியுறுத்துகின்றேன்.

தென்னகத்தின் அம்பேத்கர் எனப் போற்றப்படும் இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று. அப்போதைய சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிகட்சி அரசில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் அரசாணை வெளிவர காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி மகாத்மா காந்தி தமிழ் மொழியை அறிந்து கொள்வதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். அவரது பிறந்தநாளில் பட்டியலினத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக் கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் ஆய்விற்காக ஏற்படுத்தப்பட்ட குழு, முன்பே திட்டமிடப்பட்ட முடிவுகளை மனதில் வைத்துக்கொண்டு, பெயரளவுக்கு ஓர் ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக வந்த செய்தியை அறிந்து, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகமுறையில் போராடிய கிராம மக்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பரந்தூர் விமான நிலைய பகுதியில் உள்ள நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்தும் ஆராய அரசால் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் முறையான வகையில் ஆய்வை மேற்கொள்ளாமல் ஒப்புக்கு ஆய்வை நடத்தவுள்ளதாக வந்த செய்தியை அறிந்து, பரந்தூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் பரந்தூர்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளின் காவலராக காட்டிக் கொண்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமானநிலைய திட்டத்தை செயல்படுத்த ஒற்றை காலில் நிற்பதும், இத்தனை நாட்களாக போராடிவரும் மக்களை உதாசீனப்படுத்துவதும், விமான நிலையத்திற்கு மாற்று வழிகளைப் பற்றி சிந்திக்க மறுப்பதும் ஏன் என அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆகவே, பரந்தூர் மக்களும் தமிழ்நாட்டு மக்கள் தான், வேற்று கிரக வாசிகள் அல்ல என்பதை முதலமைச்சர் அவர்கள் உணர்ந்து அவர்களது போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதோடு, ஜனநாயக முறையில் போராடியவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவித்திட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

2023ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஜூனியர் ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த செல்வபிரபுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில், மும்முறை நீளம் தாண்டுதலில் செல்வபிரபு தங்கம் வென்று வரலாறு படைத்தார். இதையடுத்தே அவருக்கு, ஆசியாவின் சிறந்த தடகள வீரர் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. வரும் 10ஆம் தேதி பாங்காக்கில் நடைபெறும் விழாவில் ஆசிய தடகள சங்கம் செல்வபிரபுவுக்கு விருது வழங்கி கௌரவிக்கவுள்ள இந்த தருணத்தில் அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இந்தியாவின் சார்பில் தடகள விளையாட்டுகளில் மேலும் பல சர்வதேச விருதுகளை செல்வ பிரபு வென்றெடுக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசு மருத்துவக்கல்லூரி, அரசு பல் மருத்துவக் கல்லூரி, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் ஆகியோருக்கான கட்டணத்தை முந்தைய கட்டணத்தில் இருந்து கணிசமான அளவிற்கு உயர்த்தியிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்வி இயக்ககம் தனது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வகுப்பறைகள், தங்கும் விடுதிகள், உணவு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மருத்துவக்கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். அதனை முறைப்படுத்தாமல் திடீரென கட்டணத்தை மட்டும் உயர்த்திருப்பது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாக மாறிவரும் சூழலில், இந்தக் கட்டண உயர்வு மேலும் அவர்களின் கனவை சிதைக்கவே செய்யும். தற்போது திமுக ஆட்சியில் பல்வேறு வகையான விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பெற்றோரை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையிலான மருத்துவக் கல்விக் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. Hydrocephalus என்ற பாதிப்பின் காரணமாக தலையில் இருந்து நீர் வடிந்ததால் அந்த குழந்தைக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த நிலையில், தவறான சிகிச்சையால் வலது கை பாதிக்கப்பட்டு, கை அகற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தவறு ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனைகளில் இது போன்ற தவறான சிகிச்சைகள் நடந்துவருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆகவே, மக்கள் உயிர் சார்ந்த இந்த பிரச்னையில் அலட்சியம் காட்டாமல் இந்த தவறுகள் நடப்பதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்நாடு அரசு அறிய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன், அரசின் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்க முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன்.

மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடகா அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கும் வகையில் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகின்றேன். மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் அவர்கள் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும். மேலும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய உரிமையை தராததோடு, மழை வெள்ள காலத்தில் மட்டும் எஞ்சிய நீரை திறந்து விடும் கர்நாடகா அரசு, தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் தேவைக்கு போதிய நீரை தராமல் அணைகட்ட நினைப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் சூழலில், குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியுமா என டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ள நிலையில் கர்நாடகா விடுவிக்க வேண்டிய தண்ணீரை காவிரி மேலாண்மை வாரியம் வாயிலாக பெறவும், கர்நாடகா அரசுக்கு எதிராக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கவும் முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆரோக்கியமான சமூகத்தை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தொற்றுநோய், தொற்றா வாழ்வியல் நோய், விபத்துகள் என மக்கள் சந்திக்கும் துன்பங்களில் இருந்து புத்துயிருடன் மீட்கும் மருத்துவர்களை மக்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு இணையாக கருதுகின்றனர். அத்தியாவசிய சேவையின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை இந்த மருத்துவர் தினத்தில் தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஜாதி, மத வேறுபாடு இன்றி சமூகத்தை உயர்த்தும் நற்குணங்களுடன் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே ஹஜ் பெருநாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஏழைகளின் பசி போக்க உதவுதல், பொருளாதாரம் இல்லாமல் தவிப்போருக்கு உதவுதல் போன்ற தன்னலமின்றி உதவிகரம் நீட்டும் இஸ்லாமிய சகோதரர்களின் கருணை உள்ளத்தை கண்டு எப்போதுமே நான் நெகிழ்கின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.