January 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் புது பாய்ச்சலுடன் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல், தொழில், விவசாயம், கல்வி, விளையாட்டு, மக்கள் சார்ந்த பிரச்னைகள் என அனைத்து விதமான செய்திகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி நடுநிலையாக ஒளிபரப்பு செய்வதில் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. பேச்சு, கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்தை தொடர்ந்து நிலைநாட்டி, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் செய்திகளை ஒளிபரப்பி வரும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி மென்மேலும் உயர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
January 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய தேசிய விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட வீரத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை உறுதியோடும் இறுதிவரை பயணித்து சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
January 20, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சமூகநீதியை பாதுகாக்கவும், கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் முதன்முறையாக பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஏற்கனவே இருந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கும், அதற்கு சட்டரீதியாக எந்தவித தடையும் இல்லை என்பதற்கும் பீகார் தொடங்கி ஆந்திரா வரையிலான பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன் ? பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 19, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வறுமையின் காரணமாக வீட்டுவேலைக்கு சேர்ந்த இளம்பெண்ணை திரு.கருணாநிதி அவர்களின் மகனும், மருமகளும் சேர்ந்து நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையாக தாக்கி துன்புறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நன்றாக படிக்க வைக்கிறோம், படிப்புக் கட்டணத்தையும் நாங்களே செலுத்துகிறோம் என ஆசைவார்த்தைகள் கூறி பணிக்கு சேர்ந்தபின் நாள்தோறும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் குடும்பம் என்ற அதிகாரப்போக்கே இதுபோன்ற அறுவறுக்கத்தக்க வன்முறைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடக் காரணம் என பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தி, மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கருணாநிதி அவர்களின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
January 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் பிரபாகரன், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார்த்திக், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கருப்பாயூரணி கார்த்திக் என முதலிடம் பிடித்த மூன்று வீரர்களுக்கும், தீரத்துடன் களமாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், தங்களுக்கு வழங்கப்படும் கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களுக்கு பதிலாக தங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை அரசு இந்த ஆண்டிலாவது பரிசீலனை செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை வளர்ப்போருக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் 373 வது தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் வகையிலும் அரசுப் பணி வழங்குவதோடு, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
January 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேசிய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் நடப்பு உலகச் சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இளம் வயதிலேயே சதுரங்க உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கி அதில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா அவர்கள், உலகளவில் அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
January 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சி ஜனவரி 23ஆம் தேதி முதல் நடைபெறுகிறது! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்! 23.01.2024-செங்கல்பட்டு (வடக்கு, மத்தியம்),திருவள்ளூர் (மேற்கு, தெற்கு,காஞ்சிபுரம் #27.01.2024-விழுப்புரம்,கள்ளக்குறிச்சி#28.01.2024-சேலம் #29.01.2024-சிவகங்கை #30.01.2024-புதுக்கோட்டை #31.01.2024-மதுரை (புறநகர் தெற்கு)
January 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் நூறு இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நகரம் கூட இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள தூய்மையான நகரங்களின் பட்டியலில் திருச்சி 112 வது இடத்தையும், சென்னை 199 வது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதல் நூறு தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுவந்த சென்னை, நடப்பாண்டில் 199 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் சென்னை மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. சாலை, மெட்ரோ மற்றும் மழைநீர் வடிகால் ஆகிய மூன்று பணிகளும் முறையான திட்டமிடலின்றி ஒரே நேரத்தில் நடைபெறுவதாலே சென்னை மாநகராட்சியில் மாசு அதிகரிக்க காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த பழனிசாமி ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தன் அறிக்கையை சமர்ப்பித்து ஓராண்டை கடந்த நிலையிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது திமுக அரசின் மீதான சந்தேகத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே, தூய்மை, குப்பை சேகரிப்பு, சுகாதாரம், கழிவுநீர் அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
January 13, 2024 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
January 12, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தரையை துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியை (Mop Stick) குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட அம்மருத்துவமனையில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தரையை துடைக்க உதவும் மாப் குச்சியை (Mop Stick) குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தும் புகைப்படம் சுகாதாரத்துறையின் அவலநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என எழுந்த அடுக்கடுக்கான புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே மருத்துவமனைகளில் நடைபெறும் தொடர் சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தேவையான அடிப்படை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.