நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் என்று கூறியதோடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி சாதனை படைத்து நாட்டின் முன்னோடியாக திகழ்ந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன். அதே நேரத்தில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதோடு, இட ஒதுக்கீடு மசோதாவின் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், நாட்டின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரங்களில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு சட்டமசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவதோடு, அதனை விரைவில் அமலுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திரு. விஜயகுமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. வழக்கமான பணியை முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பலால் திரு. விஜயகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள்தோறும் கொலை, கொள்ளை என தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னை மடிப்பாக்கத்தில் குறுகிய சாலையில் முந்திச் செல்ல வழிவிடவில்லை எனக்கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு மாவட்டச் செயலாளர் திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்த போது திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்திரை வழிமறித்து அடையாளம் தெரியாத சில நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகார் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடே காரணம் என சொல்லப்படுகிறது. ஆகவே, எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் மந்த கதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்களில், மழைநீர் தேங்குவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பல இடங்களில் வடிகால் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் முறையான அறிவிப்பு பலகைகளோ, பாதுகாப்பு தடுப்புகளோ வைக்கப்படாத காரணத்தினால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பதோடு, பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முறையான அறிவிப்பு பலகைகள் மற்றும் தடுப்புகள் வைத்து விபத்தை தடுக்கும் வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன். அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 4048 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 300க்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நாளிதழ்களில் வெளியாகி இருக்கும் செய்தி வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதனை உருவாக்கும் ஏடிஸ் கொசுவை ஒழிப்பது தான் ஒரே வழி என்பதை உணர்ந்து கொசு ஒழிப்பு பணியை தமிழ்நாடு முழுவதும் அரசு தீவிரப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் வருவோருக்கு டெங்கு பரிசோதனையை மேற்கொள்ள ஏதுவாக பரிசோதனை கருவிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் டெங்கு உறுதி செய்யப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகளை உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை கணக்கெடுத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதோடு, டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.