புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைகள், தொலைக்காட்சி தொடர்களை எழுதி வந்த பிரபல எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பிரபல திரைப்பட மூத்த நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. நாடக நடிகராக அறிமுகமாகி திரைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை தக்க வைத்திருந்த திரு.டெல்லி கணேஷ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான பொது கலந்தாய்வு வரும் 11, 12 ஆகிய தேதிகளில் அந்தந்த சுகாதார மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான காலிப்பணியிடங்கள் கலந்தாய்வுக்கு முன்பாகவே லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலமாக புதியதாக பணிக்கு சேர்ந்தவர்கள் 6 லட்ச ரூபாய் முதல் 12 லட்சம் வரை பணத்தை லஞ்சமாக கொடுத்து பணியிடங்களை முன்கூட்டியே பெற்றுவிட்டதால், பணவசதி இல்லாமல் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றிவரும் செவிலியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்கள் எத்தனை? எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளன? என்பது குறித்து முழுமையான விவரங்களை வெளியிடாமல் நடைபெறும் கலந்தாய்வு எப்படி நேர்மையாக நடைபெறும் ? என்ற கேள்வியை செவிலியர்கள் எழுப்பியுள்ளனர். ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் நிலவும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறை, தற்போது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வையும் வெளிப்படைத்தன்மையாக நடத்த மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பொது கலந்தாய்வுக்கு முன்பாகவே லஞ்சம் பெற்றுக் கொண்டு செவிலியர் பணியிடங்களை ஒதுக்கியிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் வெளிப்படைத்தன்மையோடு பொது கலந்தாய்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழப்பு – டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகால தொற்றுநோய்களும் தீவிரமடைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். அடுத்த சில மாதங்களுக்கு டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, இனியாவது விளம்பர அரசியலை தவிர்த்து, மக்களை பெருமளவு பாதிக்கும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுப்பதோடு, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.