சென்னையில் பால்வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதையடுத்து பால் நிறுத்தப் போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால்நிறுத்தப்போராட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் மக்களைப் பாதிக்கும் வகையில் பால் விலையை உயர்த்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கோயில் அடிமனையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போர் பலரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளபோதும், இந்த தீர்ப்பால் தங்களது வாழ்விடத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் சிக்கல் ஏற்படுமோ என அச்சம் அடைந்துள்ளனர். தமிழக அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும்போது, அங்கு குடியிருப்போரை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சுமூகத்தீர்வை காண வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன. இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? எத்தனை பேர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பதில் வெளிப்படை தன்மை இல்லை. அரசு துறைகளில் முழுமையாக லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இந்த அரசுக்கு இருக்குமானால், சோதனைக்கு உள்ளான அரசு அலுவலகங்களில் இருந்து கைப்பப்பற்றப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் உயர் அதிகாரிகள், துறைகளின் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தீயசக்தி திமுகவின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே அக்கட்சியின் உட்கட்சி பூசலால் எழுந்துள்ள மோதலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் திமுக அமைச்சருக்கும், திமுக எம்பிக்கும் இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. ரவுடிகளைப் போல திமுகவினர் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து பெண் காவலரை தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்திருக்கிறார். திமுகவினரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தீய சக்திகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தருணத்தை மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா?

தாயன்புடன் யானைகளை பராமரிக்கும் தமிழ்நாட்டின் முதுமலையை சேர்ந்த தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘The Elephant Whisperers’ உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றிருப்பது பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.அதே போல இந்திய மொழிகளில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கர் விருது பெற்று சாதனை படைத்திருப்பதும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த படைப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை ஆளுநர் இரண்டாவது முறையாக மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை அடிமைப்படுத்திய ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் உயிரோடும், சமுதாய நலத்தோடும் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசும், ஆளுநரும் இணைந்து சட்டமசோதா விரைவில் அமலுக்கு வருவதற்கு வழிவகுப்பது மட்டுமே இன்றைய சூழலுக்கு அவசர அவசிய தேவையாகும். வலுவான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே அநியாய உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.