ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மக்களின் உயிர் பிரச்னையாக கருதப்படும் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கட்டணம் ரூ.55 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு லாரி உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பதன் விளைவாக காய்கறி, உணவு தானியங்களின் விலை உயரக்கூடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். அதே போல காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக மூட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு இதயம் கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மொழியால் வேறுபட்டிருந்தபோதிலும் வணிகம், அரசியல், பண்பாட்டு, கலை, இலக்கியம் ஆகிய தொடர்புகளுடன் தென் இந்தியாவின் சகோதர, சகோதரிகளாக தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் நம்முடன் ஒன்றுபட்டிருக்கின்றனர். யுகாதி புத்தாண்டு கொண்டாடும் இந்த தருணத்தில் இப்போது போல எப்போதும் எல்லா வளமும் பெற்று அன்பும், ஆரோக்கியமும் அவர்கள் வாழ்வில் என்றும் நீடித்து நிலைத்திருக்க விரும்புகின்றேன்.

பெண்காவலர்களுக்கான பொன்விழா ஆண்டை ஒட்டி நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர், நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டபோதிலும், அதில் பெண்காவலர்கள் பணியிடத்திலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் ஏதும் இல்லாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலர்கள் சக ஆண் காவல் உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. விசாரணைக்குச் செல்லும் இடங்களிலும், அரசியல் பொதுகூட்டங்களுக்கு பாதுகாப்புப் பணிகளுக்குச் செல்லும்போதும் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறுகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் பெண்காவலர்களை காக்க வேண்டிய அரசானது, இத்தகைய கொடுமைக்கு உள்ளாகும் பெண்காவலர்களை பாதுகாக்கும் நடைமுறைகளைச் செயல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல. பெண்காவலர்களை வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆராய அரசு தரப்பில் நிபுணர் குழு அமைத்து பரிந்துரைகளைப் பெற்று அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும் என திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்தும் மக்களை அரசு அதிகாரிகளோ, தொகுதியின் திமுக எம்எல்ஏவோ இதுவரை சந்தித்துப் பேசாதது அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பரவாக்கோட்டை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் பிரசவம் போன்ற அவசரகால மருத்துவ தேவைகளுக்கு 10 கி. மீ தொலைவில் உள்ள மன்னார்குடி அல்லது உள்ளிக்கோட்டைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்குடி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள திமுக எம்எல்ஏ தனது வாக்குறுதியில் கூறியபடி பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டவும், ஆம்புலன்ஸ், படுக்கை வசதிகள், மருத்துவமனை உபகரணங்கள் கிடைக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.