October 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு படித்துவந்த மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.
October 11, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சன் செய்தி தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், எனது அருமை நண்பருமான திரு.குணசேகரன் அவர்களின் தந்தை திரு.முனியா அவர்கள் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் திரு.குணசேகரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
October 11, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சிறைவாசிகளின் விடுதலைக்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் அளிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளையொட்டி 20 இஸ்லாமியர்கள் உட்பட 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் அவர்கள் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என முதலமைச்சர் கூறியிருக்கிறார். அரசின் பரிந்துரையை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்ததுடன் தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் கொடுத்து 49 சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான ஒப்புதலைப் பெறுவதோடு, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஆதிநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
October 10, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: சோளிங்கர் சி.என்.பட்டடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் தொடர் ஊழல் முறைகேடுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
October 10, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பல வருடங்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தங்களை, திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை DMS வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய செவிலியர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு 8 வருடங்களாகியும் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை எனக்கூறி செவிலியர்கள் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதி 356-ல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றி வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை கைது செய்து அடக்குமுறையை கையாண்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் செவிலியர்கள் ஆற்றிய பணியை நினைவு கூர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதுடன், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
October 9, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை பெற சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெறும் சம்பிரதாய நடவடிக்கையாக இல்லாமல், இப்பிரச்னையில் தொடர்ச்சியான முயற்சிகளை உறுதியோடு மேற்கொள்ள தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.
October 9, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சுவடுகள் மறையும் முன்னதாகவே இன்று அரியலூரிலும் பட்டாசு விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், குடோன்கள் மற்றும் விற்பனைக்கடைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே விபத்து ஏற்படுவதற்கான காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பட்டாசு விபத்துகள் நடைபெற்று அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நிவாரணங்கள் மட்டுமே உயிரிழப்புகளுக்கு தீர்வாக அமையாது என்பதை இத்தருணத்தில் உணர்ந்து விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்திட பட்டாசு தயாரிக்கும் இடங்கள் மற்றும் குடோன்களில் முறையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
October 8, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் பட்டாசு விற்பனைக் கடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கடந்த சில நாட்களாக பட்டாசு குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டாசு தயாரிக்கும் இடங்கள், குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் முறையான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதோடு, இது போன்ற விபத்துகள் மேலும் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.
October 7, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதோடு, 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலை மற்றும் உபகரணங்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த 4 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை கடற்கொள்ளையர்கள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக நாகை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அம்மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்ய ஏதுவாக இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்துவதோடு, இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற மீனவர்களின் உபகரணங்களை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
October 7, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீரங்கனைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என பங்கேற்ற அனைத்து விளையாட்டு பிரிவுகளும் வெற்றிகளை குவித்திருக்கும் இந்திய அணி, பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது. சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு பிறகு 100 பதக்கங்களை வென்ற அணிகள் பட்டியலில் 4 வது நாடாக இந்தியா இணைந்திருப்பதும், அதில் தமிழ்நாட்டு வீரர்களின் பங்களிப்பு இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்திருக்கும் இந்திய அணியினர், எஞ்சிய போட்டிகளிலும் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்த்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.