விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளசாராயம் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தை ஒட்டிய ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி மாநில எல்லை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் தாராள கள்ளச்சாராய புழக்கத்திற்கு காரணமாக எல்லைகளில் பணியாற்றும் மதுவிலக்கு போலீசார் வியாபாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு விற்பனையை ஊக்குவிப்பதே என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே TASMAC மதுவிற்பனை, போதை பொருட்களின் புழக்கம் ஆகியவற்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கும் இந்த சூழலில் கள்ளசாராய விற்பனையும் சேர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கள்ளச்சாராய புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துவதோடு இதை கவனிக்க தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லா உயிர்களிடத்தும் நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கும் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய அவசரகால டிஜிட்டல் யுகத்தில் வீடு, அலுவலகம் என அனைத்தையும் கவனிக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திலும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த அன்னையர்கள் என்றுமே தவறுவதில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கும், லட்சோப லட்சம் கழகக் கண்மணிகளுக்கும் பெற்றெடுக்காத தாயாக திகழ்ந்தவர் மறைந்த மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள். அவரது ஆட்சிகாலத்தில் அன்னையர்களுக்காக பல நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தி அனைவரின் அன்பை பெற்றவராகத் திகழ்ந்தார். இதயதெய்வம் அம்மா அவர்கள் காட்டிய அன்பு வழியில் தாய்மார்களை நேசிக்கும், அரவணைக்கும் பண்பை நமக்குள் என்றென்றும் வளர்த்தெடுப்போம் என்று இந்த அன்னையர் தினத்தில் உறுதி ஏற்போம்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய பள்ளிக்கட்டடம் கட்டப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக அருகில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் மாற்றப்படுவதாக கல்வித்துறை சார்பில் கூறப்பட்டநிலையில், அங்கு திருமண மண்டபம் கட்டப்பட உள்ளதாக வரும் செய்திகள் மாநகராட்சி பள்ளியை மட்டுமே நம்பி இருக்கும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. கல்விக்கூடங்களை கோயில் போன்று புனிதமாக கருதும் வகையில் பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என பாடிய பாரதியார் வாழ்ந்த திருவல்லிக்கேணியில், நடுநிலைப்பள்ளி இருந்த இடத்தில் பள்ளிக்கட்டடம் மட்டுமே கட்டப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கையினை ஏற்று பள்ளிக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி கைவிடும்படி முதலமைச்சர் உடனே உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

மருத்துவமனைகளில் நோயாளிகளை மருந்துகளோடும், மாத்திரைகளோடும் மட்டுமின்றி அன்பாலும், புன்னகையாலும் அக்கறையோடு கவனித்து குணம்பெற செய்யும் அனைத்து செவிலியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். கொரோனா போன்ற பல்வேறு கொடிய உயிர் கொல்லி நோய் தொற்று காலகட்டம் மட்டுமின்றி அனைத்து தருணங்களிலும் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் மருத்துவ சுகாதார கட்டமைப்பில் முக்கிய அங்கமாக, அர்ப்பணிப்பு மிக்கவர்களாக செவிலியர்கள் திகழ்கின்றனர். அவ்வாறு மருத்துவர்களுக்கு இணையாக முன்களப்பணியாளர்களாக பல்வேறு சூழ்நிலைகளில் பணியாற்றிடும் செவிலியர்கள் பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். ஆகவே நம் உயிர்காக்க தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளை ஆளும் திமுக அரசு செவிமடுத்து கேட்டு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலக் கல்விக் கொள்கைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு. ஜவஹர் நேசன் அவர்கள் பதவி விலகியதன் மூலம் மத்திய அரசின் கல்விக்கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என கூறி மாநிலக் கல்வி கொள்கை குறித்து ஆராய்வதாக திமுக அரசு மேற்கொண்ட இரட்டை வேடம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வெளியான உடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல நடித்த திமுக அரசு, சில மாதங்கள் கழித்து அதற்கு இசைவாக 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வு முறையில் மாற்றங்களை மேற்கொண்டபோதே அதற்கு அமமுக எதிர்ப்புத் தெரிவித்தது. மாநிலக் கல்வி கொள்கை குழுவில் இருந்து விலகியுள்ள திரு. ஜவஹர் நேசன் அவர்கள், கார்ப்பரேட் கல்விக்கொள்கையையே மாநில கல்விக்கொள்கையாக மாற்றும்படி அதிகாரிகளைக் கொண்டு திமுக ஆட்சியாளர்கள் மிரட்டுவதால் ராஜினாமா செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தேசிய கல்விக்கொள்கை 2020-ன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது என்றும், இந்நிலை நீடித்தால், தமிழ்ச் சமூகத்தின் உயரிய விழுமியங்களுக்கு எதிராக கல்வி கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுவதாக பேராசிரியர் திரு. ஜவஹர் நேசன் அவர்கள் கூறியிருப்பதை புறந்தள்ளி விட முடியாது. திராவிடமாடல், மாநில சுயாட்சி, மாநில உரிமை என்று உதட்டளவில் மட்டுமே திமுக அரசு பேசி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணமாக மாநில கல்விக்கொள்கை விவகாரத்தில் திமுக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இனியும் திமுக அரசு மக்களை ஏமாற்றாமல் தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் வெளிப்படையான முடிவை அறிவிக்க வேண்டும். மாநில கல்விக்கொள்கை குழுவை சீரமைத்து குழுவில் உள்ளோர் சுதந்திரமாக முடிவு எடுக்க அனுமதித்து, மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணியில் இருந்த நாகலட்சுமி, ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் ஆனநிலையிலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாகலட்சுமியின் ஐந்து குழந்தைகளும் கணவரும் ஆதரவற்ற நிலையில் உள்ள சூழலில், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி வாய்கிழிய பேசும் திமுக அரசு, நாகலட்சுமிக்கு ஆட்சியர் வழங்கிய பொறுப்புக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீதும், நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்துக்கு உரிய சட்ட உதவிகளை செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்.

ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்த வகை செய்யும் அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தங்களை பணி நியமனம் செய்ய வேண்டுமானால் மேலும் ஒரு தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தும் அரசாணை கடந்த 2019ஆம் ஆண்டு பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் இந்த அரசாணையை எதிர்த்ததை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பணி நியமன போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 முறை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போதும் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதமிருக்கும் ஆசிரியர்களை தமிழக அரசின் சார்பில் இதுவரை அழைத்து பேசாததைக் கண்டிப்பதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.