ரயில்வே தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? – தமிழக தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ரயில்வே வாரியத்தின் மூலம் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள உதவி ஓட்டுநர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 6,315 பேரில் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களில் அமைக்கப்படும் இது போன்ற தேர்வு மையங்களால், தொலைதூர பயணம் மேற்கொள்வது மட்டுமின்றி, உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்தை அடைவதும் மிகுந்த சிரமம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ரயில்வே பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசையும், ரயில்வே துறையையும் வலியுறுத்துகிறேன்.

திருப்பூர் அருகே தோட்ட இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியர் படுகொலை – அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலை, கொள்ளைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள தோட்ட இல்லத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் மற்றொரு படுகொலைச் சம்பவம் தமிழக காவல்துறையின் தோல்வியையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திருப்பூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே தனியாக வசித்துவரும் முதியவர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும், அவர்களின் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதும் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த முதியவர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய வேண்டிய காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி தமிழக மக்களை திசை திருப்புவதிலும் தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றுவதிலும், கவனம் செலுத்தி வருவதே இதுபோன்ற சம்பவங்கள் தொடர காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருப்பூர் வயதான தம்பதியர் கொலைவழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9,492 சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடல் – உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்க முடியாத திமுக அரசு, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுப்பது வெட்கக்கேடானது. இந்திய அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவு மூடப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தேசத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதில் முன்னணி வகிக்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்படுவது, அந்தந்த தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது அதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமை பேசுவது வெட்கக் கேடானது. முதலைமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போதும், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கும் திமுக அரசு, தமிழகத்தில் முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுவது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தொழில் முடக்கத்தை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதோடு, பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை சிறு குறு நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்திற்குள் புகுந்து பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் – திமுக ஆட்சியின் அடையாளமாக திகழும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை பலமுறை சுட்டிக்காட்டியும், எந்த வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் காவல்துறையால், பட்டப்பகலிலேயே பேருந்தை வழிமறித்து அதில் பயணித்த பள்ளி மாணவர் ஒருவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் அதற்கு அடிப்படையாக திகழும் போதைப் பொருட்கள் விற்பனையும், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் தலைதூக்கும் என்பதையே இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய காவல்துறை, முற்றிலுமாக செயலிழந்து ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறியிருப்பதே, இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து, தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

“எனது ஆண்கள்” என்ற நூலின் மூலம் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ப.விமலா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் பற்றாளராக, கல்லூரி பேராசிரியராக, சிறந்த மொழி பெயர்ப்பாளராக என பன்முகத் திறமையின் மூலம் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பேராசிரியர் ப.விமலா அவர்களின் கல்வி, எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு பணி மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.