தமிழக அரசின் யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் பாதிப்புக்குள்ளாகும் மலைவாழ் மக்கள் – வனத்துறையால் அவசரகதியில் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு அறிக்கையை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசின் வனத்துறையின் சிறப்புக்குழுவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், ஓவேலி, முதுமலை ஆகிய வனச்சரகங்களை ஒட்டிய சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், நெருக்கடியான யானை வழித்தடங்களை அடையாளம் காணுதல், யானைகளுக்கான நீர் ஆதாரம் உள்ளிட்டவைகள் அத்தியாவசியமானது என்றாலும், முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் மலைவாழ் பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கை கடும் கண்டத்திற்குரியது. வனத்துறை மூலமாக தயாரிக்கப்பட்ட யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை, ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருப்பதோடு, அதற்கான கருத்துக்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு குறுகிய அளவு கால அவகாசம் மட்டுமே வழங்கியிருப்பது பன்னெடுங்காலமாக மலைப்பகுதிகளில் வசித்து வரும் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் செயலாகும். எனவே, தமிழக அரசின் வனத்துறையால் அவசரகதியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை உனடியாக திரும்பப் பெறுவதோடு, முறையான ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து, உரிய கால அவகாசம் வழங்கி, பொதுமக்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின்னரே இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் உயிரையும், சுகாதாரத்தை பேணிக்காப்பதிலும் மருத்துவ சமுதாயத்தின் உயிர்நாடியாக திகழ்ந்து கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த செவிலியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம் செய்தல், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என மருத்துவத்துறையில் தொடரும் நீண்டநாள் குறைபாடுகளை களைந்து தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் நம் உயிரை காக்கும் செவிலியர்கள் அனைவரும் மனநிறைவுடன் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்நாளில் வலியுறுத்துகிறேன்.

விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காத CPCL நிறுவனத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் – அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. நாகப்பட்டினம் CPCL எண்ணெய் நிறுவன விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளை கடந்த நிலையிலும், அந்த நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை என நிலத்தை இழந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், CPCL நிறுவனம் சார்பாக எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக அறவழியில் போராடிக் கொண்டிருந்த பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நிலம் கையகப்படுத்துவதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் முழுமையாக கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

வனப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது –பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து, கோம்பு ஆகிய வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளை வனத்துறையினர் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. வனப்பகுதிகளில் தங்கி கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் பூர்வகுடிகளின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, உடமைகளை உடைத்தெறிந்திருப்பதுடன், குடியிருப்புவாசிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றியிருக்கும் வனத்துறையின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தலைமுறை, தலைமுறைகளாக வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கத் தவறிய திமுக அரசு, வனத்துறையின் மூலம் வன்முறையை கையாண்டு பூர்வகுடிகளை அப்புறப்படுத்தியிருப்பது தமிழக அரசின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் பூர்வகுடிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில், அவர்கள் விரும்பும் வனப்பகுதியிலேயே வசிப்பதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என வனத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை இருமடங்காக அதிகரிப்பு – நியாயவிலைக்கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அபராதத் தொகை உயர்வுக்கான அறிவிப்பை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நியாயவிலைக்கடைகளில் அதிகாரிகள் நடத்தும் சோதனைகளின் போது ஏற்படும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவுக்காக, சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை அரசு இருமடங்காக உயர்த்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடையின் அளவு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி பலமுறை அளிக்கப்பட்ட புகார்மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தற்போது அபராதத் தொகையை உயர்த்தி புகார் அளித்த ஊழியர்கள் மீதே கூடுதல் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவால் விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரித்திருப்பதால், தங்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை அபராதத்திற்கே சென்றுவிடும் சூழல் உருவாகியிருப்பதாகவும், தமிழக அரசின் இந்த புதிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, நியாயவிலைக்கடை ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, கிடங்குகளில் இருந்து நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்டம் சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட V.சொக்கலிங்காபுரம் கிளைக் கழகச் செயலாளர் திரு.கு.காளீஸ்வரன் அவர்கள் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வந்த திரு.கு.காளீஸ்வரன் அவர்களை இழந்து வாடும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற  எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.