இயற்கை பேரிடர், வறட்சி உள்ளிட்ட பல்வேறு விதமான சவாலான சூழலிலும் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவை உற்பத்தி செய்வதை முதன்மை பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.விவசாயத்தில் ஏற்படக்கூடிய சிறிய அளவு மாற்றமும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, எக்காலத்திற்கும் உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன். கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் உடமைகளுடன் தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து அம்மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர். 3 நாட்களுக்கு மேலாக குடியிருப்புகளுக்குள் தேங்கியிருக்கும் வெள்ள நீர் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்திருக்கும் ரூ.6000 நிவாரணத் தொகை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. சென்னையை ஒப்பிடும் போது மும்மடங்கு பெய்த மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சென்னையை போலவே வெள்ள நிவாரண தொகையும் வழங்குவது ஏற்புடையதல்ல. எனவே, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனமழையால், இழந்த வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தேவையான அளவிற்கு வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

2023 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் செல்வி. வைஷாலி, துரோணாச்சாரியார் விருதை வென்றிருக்கும் சதுரங்க பயிற்சியாளர் திரு.ஆர்.பி ரமேஷ், வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை வென்றிருக்கும் தமிழக கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பல்வேறு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் முகமது சமி, கபாடி வீரர் பவன்குமார் ஷெராவத், இறகு பந்தாட்ட வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் உட்பட விருதுகளை வென்றிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு விளையாட்டுத்துறையில் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் ரயில் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், கனமழை காரணமாக வழித்தடங்கள் சேதமடைந்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே 500க்கும் அதிகமான பயணிகளுடன் கடந்த இரண்டு தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 24 மணி நேரங்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம் மட்டுமே செய்யப்பட்ட நிலையில், பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் ரயிலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் சிக்கியிருப்பதால் அவர்களுக்கான அவசர கால மருத்துவ உதவியை ஏற்படுத்தி தருவது இந்த நேரத்தில் அவசியமாகிறது. ஆகவே, அவசரகால மருத்துவக்குழுவை உடனடியாக அனுப்பி வைப்பதோடு, ரயிலில் சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கனமழையால்பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தங்களைமுழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது அன்புவேண்டுகோள்.  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடிமற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால், சாலைகளிலும் குடியிருப்புகளிலும் வெள்ள நீர்புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு முடங்கியுள்ளது.  ஆகவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயேமுடங்கியிருக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், என அனைத்து தரப்பு மக்களையும் தகுந்தபாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்டு அவர்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் மருத்துவஉதவிகளை செய்திடுமாறு கழகத்தினரை இந்நேரத்தில் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் கனமழை பெய்துவருகிறது. அம்மாவட்டங்களில் குடியிருப்புகளில் புகுந்திருக்கும் மழைநீர் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் இல்லங்களை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான மக்கள் முடங்கியுள்ளனர். தென்மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.