புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் கோட்டாட்சியர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி – கடுமையான நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைக்குச் சென்ற வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி அவர்கள் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அதிகரித்து வரும் மணல் கொள்ளைகளும், அதனை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. மணல் கடத்தலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவர்களின் படுகொலைக்கு பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசின் அலட்சியப் போக்கே அரசு அதிகாரிகளின் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்வியின் பிறந்தநாள் என்ற நூலுக்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு.யூமா வாசுகி அவர்களுக்கும், விஷ்ணு வந்தார் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் இளம் எழுத்தாளர் லோகேஷ் ரகுமான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனித்துவமிக்க மொழிநடையால் தமிழ் எழுத்து உலகில் தலைசிறந்த எழுத்தாளர்களாக திகழும் திரு.யூமா வாசுகி மற்றும் திரு.லோகேஷ் ரகுமான் ஆகிய இருவரின் விருதுப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.