July 5, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நியாய விலைக்கடைகளில் மூன்றாவது மாதமாக தொடரும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு – ஏழை, எளிய மக்களை அலைக்கழிக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் தட்டுப்பாட்டால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கடந்த மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படாத நிலையில், நடப்பு மாதத்திலும் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை வழங்காமல் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது. நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது பொது விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. நியாய விலைக்கடைகளில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, வழக்கம் போல இம்முறையும் ஏதாவது காரணத்தைக் கூறி காலம் தாழ்த்தாமல், தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
July 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வீடுகளில் கருப்புக் கொடி, கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், பள்ளிகள் புறக்கணிப்பு, தொடர் உண்ணாவிரதம் என பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பரந்தூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முன்வராத திமுக அரசு, அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. விளை நிலங்களையும், நீர் நிலைகளையும் காக்க போராடி வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது பரந்தூர் பகுதி விவசாய மக்களுக்கு திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தங்களின் வாழ்வாதார உரிமைகளை காக்க போராடுபவர்களை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹாத்ராஸில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
July 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியக் குடியரசு முன்னாள் துணைத்தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான திரு.வெங்கையா நாயுடு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாழ்க்கையில் இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழும் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
July 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இலங்கையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான ஐயா இரா.சம்பந்தன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வந்த முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை இழந்துவாடும் உறவினர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
July 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதிலும், ஆரோக்கியத்தை பேணிக்காப்பதிலும் முக்கியப் பங்காற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொடிய நோய்த்தொற்று காலத்திலும் தன்னலம் கருதாமல் ஓய்வின்றி உழைத்து மனித உயிர்களை காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் தியாகத்தையும், சேவை மனப்பான்மையையும் போற்றி வணங்கிடும் இந்நாளில், தகுதிக்கேற்ற ஊதியம் கோரி நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடின பயிற்சி மற்றும் விடா முயற்சியால் இறுதி வரை போராடி சரித்திரமிக்க சாதனையை படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
June 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆட்சிக்கு வருவதற்கு முன்பு படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இதுவரை எத்தனை மதுபானக்கடைகளை மூடியிருக்கிறது ? – சட்டமன்றத்தில் மூத்த அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது
June 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு மருத்துவமனைகளில் இயங்கிவரும் அம்மா உணவங்களை மூட நிர்பந்திக்கும் மருத்துவமனை நிர்வாகங்களின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அட்சயப் பாத்திரமான அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னை ராஜிவ்காந்தி, எழும்பூர், ஸ்டான்லி, கீழ்பாக்கம் உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகளில் இயங்கிவரும் அம்மா உணவகங்களுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்து, அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு மருத்துவமனை நிர்வாகங்கள் மறைமுக அழுத்தங்கள் கொடுப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அம்மா உணவகங்களை மூட நிர்பந்திக்கும் மருத்துவமனை நிர்வாகங்களின் மனிதநேயமற்ற நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள் என பல்வேறு தரப்பினரின் பசியைப் போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் இதயதெய்வம் அம்மா அவர்கள் தொடங்கி வைத்த அம்மா உணவகங்களை மூட திமுக அரசு கொடுக்கும் மறைமுக அழுத்தங்கள் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. எனவே, அண்டை மாநிலங்களுக்கும் முன்னோடித் திட்டமாக திகழும் அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, போதுமான நிதியை ஒதுக்கி ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து பயன்பெறும் வகையில் அவற்றின் உட்கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்தி அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவரும் அன்புச் சகோதரருமான திரு.வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் நீண்ட ஆயுளுடனும், பூரண உடல்நலத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.