February 5, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குஜராத் மாநிலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக திசைமாறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் அந்நாட்டு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பாகிஸ்தான் சிறையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கும் காசிமேடு மீனவர்களை மீட்டுத்தருமாறு அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல, நேற்று வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பாகிஸ்தான் மற்றும் இலங்கை சிறைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை மீட்பதோடு, இனிவரும் காலங்களில் எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
February 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடாளுமன்ற உறுப்பினரும் அன்பு தம்பியுமான திரு.ரவீந்திரநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.ரவீந்திரநாத் அவர்கள் பூரண உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் பொதுவாழ்வில் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
February 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினமான இன்று, அன்னாரது திருவுருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
February 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று. ”எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம்முடைய எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக்க முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம்.
February 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
February 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளி தைப்பூச நாளன்று பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும் – வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். சாதி, மதம், இனம் வேறுபாடுகளின்றி அனைத்து உயிர்களையும் தன் உயிரைப் போலவே பார்க்க வேண்டும் என வலியுறுத்திய வள்ளலார் அவர்கள் நிறுவிய சத்திய ஞான சபையின் பெருவெளியில் வள்ளலாரின் சர்வதேச மையத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமரச சத்திய நெறியை வளர்க்கும் நோக்கில் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே வள்ளலார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஞான சபை பெருவெளியில் ஒவ்வொரு தைப்பூச நாளன்றும் நடைபெறும் ஜோதி வழிபாட்டில் பங்கேற்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். இந்த நிலையில், வள்ளலாரின் கொள்கைகளுக்கு மாறாகவும், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இடையூறாகவும் வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பக்தர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருவெளியில் புதிய கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் மக்களின் வருகைக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருளாட்சி புரிவதற்காக மட்டுமே அந்த பெருவெளி பயன்பட வேண்டும் என்பதை வள்ளலார் தனது பாடல்களிலும் ஆவணப்படுத்தியிருப்பதாக அவரின் பின்பற்றாளர்கள் கூறுகின்றனர். எனவே, ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி வழிபாட்டிற்காக பயன்படுத்தி வரும் வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கைவிடுவதோடு, மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணியை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
February 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தொலைநோக்கு சிந்தனை கொண்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வரவேற்கக் கூடிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, விவசாயிகளின் நலனுக்கான சிறப்பு திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
January 31, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்களை பற்றிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. திமுகவை தீயசக்தி எனக்கூறி தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிப் பொறுப்பிற்கு வரவிடாமல் அடியோடு சாய்த்த புரட்சித் தலைவர் அவர்கள் மறைந்த பின்பும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதையே ஆ.ராசா அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சு வெளிப்படுத்துகிறது. தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்து பொதுவாழ்வில் நேர்மையின் அடையாளமாக திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றியும், இதய தெய்வம் அம்மா அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ய விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது? ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இன்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரை நூற்றாண்டுக்கும் முன்பாகவே அரசியலில் கடைக்கோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் என்பதை திமுகவினர் மறந்துவிடக்கூடாது. புரட்சித் தலைவர் அவர்களின் நேர்மையான வாழ்க்கைக்கு, வாழ்நாள் முழுவதும் அவருக்காக கூடிய கூட்டமே சாட்சியாக இருக்கும் போது, அரசியல் காரணத்திற்காக இழிவுப்படுத்தும் நோக்கிலான பேச்சுக்கள், புரட்சித் தலைவர் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் எந்தவகையிலும் களங்கத்தை ஏற்படுத்தாது என்பதை திமுகவினர் உணர வேண்டும். மறைந்த தலைவர்கள் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்து வரும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள் இனியாவது தனது தகுதியை அறிந்து பேச வேண்டும். இல்லையெனில் அதற்கான பாடத்தை வரும் தேர்தல்களில் மக்கள் புகட்டுவார்கள் என்பதை எச்சரிக்கையாக விடுக்கிறேன்.
January 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாக பெற்று வந்த சரண் விடுப்பை (Surrender Leave) காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எதிர்கட்சித் தலைவராக இருந்த போது அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குவது ஏன்? நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதன் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற ஜனநாயக விரோதப் போக்கை தமிழக அரசு இத்துடன் கைவிட வேண்டும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி – காலிப்பணியிடங்களை உடனடியாக அதிகரிப்பதோடு, குளறுபடி, முறைகேடுகளின்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்விற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வனக்காவலர் பணியிடங்களையும் சேர்த்து 6,244 பணியிடங்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பாணை, தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. அதே நேரத்தில், முன்னதாக நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஓராண்டுக்கு பின்னர் காலதாமதாக அறிவிக்கப்பட்டதையும், அதில் ஒரே தேர்வு மையத்தில் பயின்ற ஏராளமான தேர்வர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார்களையும் கருத்தில் கொண்டு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்துவதில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் முழு கவனம் செலுத்திட வேண்டும். மேலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை நினைவாக்கும் வகையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பாணை வெளியிடுவதோடு, நியாயமான முறையில் தேர்வை நடத்தி உரிய காலத்திற்குள் முடிவுகள் வெளியிடுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செயய் வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.