அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அரசு மருத்துவமனைகளால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு – சாமானிய மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றும் தூய்மைப் பணியாளர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி என அரசு மருத்துவமனைகளின் அவலநிலை குறித்து நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய பொதுமக்களை, தனியார் மருந்தகங்களில் இருந்து ஊசி மற்றும் மருந்துகளை வாங்கி வரச் சொல்லி அலைக்கழிக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் இன்றைய நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அரசு மருத்துவமனையில் நிலவும் அடிப்படை வசதியின்மை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு தொடர்பாக எழும் புகார்களை பலமுறை சுட்டிக்காட்டியும், அதனைப் போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மருத்துவத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பையும், தரத்தையும் மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், விளம்பரத்தில் மட்டுமே குறியாய் இருக்கும் திமுக அரசால் சாமானிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரவே அச்சப்படும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்கும் தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

விருதுநகரில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண் காயம் – பொதுமக்களின் உயிரோடு விளையாடும் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத்துறையால் சாலை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் விழுந்து காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு முறையான முன்னறிவிப்பின்றியும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்றியும் நடைபெறும் சாலைப்பணிகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும், அலட்சியப் போக்குடன் செயல்படும் நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மற்றம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால் அதில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான துயரம் – விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் தேசிய மாணவர் படை (NCC) எனும் பெயரில் நடைபெற்ற போலி முகாமில் பங்கேற்ற 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கபட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் என்பவருக்கும் தேசிய மாணவர் படை(NCC)க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதும் அவர் போலி பயிற்சியாளர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேசிய மாணவர் படை முகாம் எனும் பெயரில் போலி முகாம்களை நடத்தி அதன் மூலம் பள்ளி மாணவியை வன்கொடுமைக்குள்ளாக்கிய சிவராமன் என்பவருக்கு, தனியார் பள்ளியில் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் என பலர் உடந்தையாக இருந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும்காலங்களில் இதுபோன்ற போலி முகாம்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மின்வாரியத்தில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கேங்மேன் தொழிலாளர்கள் போராட்டம் – கேங்மேன் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் நிலவும் 63 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளர்களாக நியமிப்பதோடு அவரவர் மாவட்டத்திலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பாக கேங்மேன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். கேங்மேன் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின்சார வாரிய நிர்வாகக் குழு அனுமதி வழங்கியும், அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தும் மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கே, தற்போது கேங்மேன் தொழிலாளர்கள் மாநில அளவில் திரண்டு போராடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. மழை, வெள்ளம், உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் காலங்களிலும் மக்களுக்கு தேவையான மின் விநியோகத்தை வழங்குவதற்காக தன் உயிரைப் பணயம் வைத்து இரவு, பகலாக பணியாற்றும் கேங்மேன் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள கேங்மேன் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய்த்தொற்று தமிழகத்திற்குள் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை அறிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனம், அனைத்து நாடுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை கவனத்துடன் பின்பற்றி குரங்கு அம்மை நோய்த்தொற்றை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்வதோடு, குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகளுக்கு விதைநெல், உரம், இடுபொருள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் – கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்டி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். முந்தைய ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிலும் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போன நிலையில், தற்போது உபரியாக கிடைக்கும் காவிரி நீரை நம்பி சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கடுமையான வறட்சி, பருவம் தவறிய மழை, இயற்கை பேரிடர்கள் என எத்தனையோ இக்கட்டான சூழல்களிலும் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் சம்பா சாகுபடி செய்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலங்களில் தமிழகத்திற்கு கிடைக்கும் நீரை தடுப்பணைகளை கட்டி சேமிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத திமுக அரசால், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரும் விவசாயத்திற்கு பலனளிக்காமல் வீணாக கடலில் கலப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை முழுவதையும் முறையாக தூர்வாருவதற்கான திட்டங்களை கொண்டு வராமல், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதால் எந்தவித பலனுமில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், உரம், இடுபொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை அறிவிப்பதோடு, இனியாவது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்டி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.