பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கண்டனத்திற்குரியது – மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை முதலமைச்சரும் இத்தீர்மானத்திற்கு அனுமதி அளித்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்து துறை தொடங்கி அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானத்தை திரும்ப பெறுவதோடு, ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கிய அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான உணவு தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் மனநிறைவை தந்திருக்கிறது. பல்வேறு இன்னல்களை கடந்து இக்கட்டான சூழலிலும் சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையினர், இந்திய ராணுவத்தினர், பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை மிஞ்சும் அளவுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய இயந்திரங்களை வழங்கிய நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனம், மீட்பு மற்றும் குழாய் அமைக்கும் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் பங்கு, தொழிலாளர்களை உயிருடன் மீட்க பேருதவியாக இருந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சுரங்கத்திலிருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு, இந்த சுரங்க விபத்தை முன்னுதாரணமாக கொண்டு ஆபத்தான பணிகளில் ஈடுபடும் போது தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள், விபத்து ஏற்படும் பட்சத்தில் மீட்பதற்கான மாற்று ஏற்பாடுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். #UttarakhandTunnelRescue

பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணிக்காக விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு பிறப்பித்திருத்திருக்கும் உத்தரவு கடும் கண்டனத்திற்குரியது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தால் பரந்தூர், வளத்தூர், தண்டலம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் உள்ளடக்கிய பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் முக்கியமான நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு மாறாக, நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. பல்வேறு விதமான போராட்டங்கள் மூலமாக தங்களின் எதிர்ப்பை அறவழியில் பதிவு செய்துவரும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதும், பொதுமக்கள் ஒன்று கூடி கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானத்தை புறக்கணிப்பதும் அரசின் மக்கள் விரோதப் போக்கையே வெளிக்காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், விமான நிலையம் அமைய உள்ள இடத்தையும், நீர் நிலைகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை கூட வெளியாகாத நிலையில், அவசரகதியில் நிலத்தை கையகப்படுத்துவது ஏன் ? என அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழக அரசு தனது விடாப்பிடி தனத்தை கைவிட்டு, விளைநிலங்கள், ஏரி, குளங்கள், குடியிருப்புகளை அழித்து விமான நிலையம் தேவையில்லை என்ற முழக்கத்தை முன்னிறுத்தி ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னையை காது கொடுத்து கேட்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் புலிக்கொரடு கிராமம் ராஜிவ்காந்தி நகரில் நான்கு தலைமுறைகளாக வசித்து வரும் நூற்றுக்கும் அதிகமான கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன். காப்புக்காடு வன எல்லையோரத்தில் வசித்து வரும் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தாம்பரம் நகராட்சி நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. பட்டா வழங்கப்பட வேண்டிய நிலப்பரப்பிற்கு ஈடாக வேதநாராயணபுரம் கிராமம் தேவர்மலைப் பகுதியில் இருமடங்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும் பட்டா வழங்குவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ராஜிவ்காந்தி நகரில் வசிக்கும் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநருமான பாத்திமா பீவி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தின் போது தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்த பாத்தீமா பீவி அவர்கள் அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனுக்கான கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியதையும் இந்த நேரத்தில் நினைவுகூறுகின்றேன். நீதித்துறையின் உயர்மட்ட பதவிகளில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொடர்ந்து போராடி, சமத்துவமிக்க நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த பாத்திமா பீவி அவர்கள் ஆற்றிய பணிகள் இந்திய நீதித்துறை வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

பொதுமக்கள் அதிகளவு விரும்பி பருகும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை திடீரென நிறுத்த முடிவு செய்திருக்கும் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. பொதுமக்கள் விரும்பும் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்வதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பது போல குறைத்துவிட்டு, பால்பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருக்கும் திமுக அரசு, பொதுமக்களின் நீண்டகால பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் வருவாயை பெருக்க மாற்று ஏற்பாடுகளை செய்வதோடு, பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா ஆகிய நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.