காலாவதியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதும், பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத பேருந்து பயணங்களும் தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? பராமரிப்பற்ற அரசுப் பேருந்துகளின் மூலம் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போக்குவரத்துத்துறையின் தொடர் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் வழியில் அண்ணாநகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்றின் கதவு திடீரென கழன்று விழுந்ததில் அதில் பயணித்த பெண் பயணி காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருச்சியில் ஓடும் பேருந்திலிருந்து இருக்கையுடன் சாலையில் தூக்கிவீசப்பட்ட நடத்துனர், சென்னையில் மாநகரப் பேருந்தின் பின்பக்க இருக்கை அருகே ஏற்பட்ட ஓட்டையில் கீழே விழுந்து பெண் பயணி படுகாயம் என முறையான பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளும், அதனால் ஏற்படும் தொடர் விபத்துக்களும் தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆயிரக்கணக்கான புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் தவறாமல் இடம்பெறும் அறிவிப்பை செயல்படுத்த முன்வராத திமுக அரசு, காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை மற்றும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

விருதுநகர் அருகே ஆவியூரில் இயங்கி வரும் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு – விபத்திற்கு காரணமான கல்குவாரியை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடிவிபத்து நிகழ்ந்த கல்குவாரி, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வருவதாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அக்குவாரியை மூட வலியுறுத்தி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்த விபத்திற்கு காரணம் எனக்கூறி அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்தின் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கும் குடியிருப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதோடு, விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், 3 அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு காரணமான காரியாபட்டி கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் இயங்கிவரும் கல்குவாரிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று தடுப்புச்சுவற்றில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகப் பொருளாளர் வீரபாண்டி திரு.எஸ்.கே. செல்வம் அவர்களின் மீது போலியான புகாரில் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சட்டத்தின் படி நடக்க வேண்டிய தமிழக காவல்துறை ஆளுங்கட்சியின் சார்பு அணியாக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் பணியை தடுத்து நிறுத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை, கழகப்பொருளாளர் வீரபாண்டி திரு.எஸ்.கே செல்வம் மீது அளிக்கப்பட்ட போலியான புகார் மீது எந்தவித விசாரணையுமின்றி அவசரம் அவசரமாக பொய் வழக்கு பதிவு செய்து மக்கள் பணியாற்றும் எதிர்க்கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளை முடக்க முயற்சிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. ஆளுங்கட்சி பிரமுகர்களால் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய தமிழக காவல்துறை, ஆளுங்கட்சியான திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு மக்கள் பிரதிநிதிகள் மீது அடக்குமுறைகளை கையாண்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. கழகப் பொருளாளர் வீரபாண்டி திரு.எஸ்.கே.செல்வம் அவர்கள் மீது போலியான புகாரில் பொய்யாக பதிவு செய்யப்பட்டிருக்கும் பொய்வழக்குப்பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் நிகழும் குளறுபடிகள் களையப்பட வேண்டும் – தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற அக்கல்லூரியின் முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய பாதுகாப்புப்படை, மாநில ஆயுதப்படை மற்றும் காவல்துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள், நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சிப்பதும், அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, சிசிடிவி கேமிராக்கள் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

உழைக்கும் மக்களின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உழைப்பாளர்கள் தினத்தை உரிமையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ”செய்யும் தொழிலே தெய்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்வியலில் சமூக இயக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களையும், அவர்களின் உழைப்பையும் மே தின நன்னாளில் போற்றி மகிழ்வோம். “உழைப்பே உயர்வை தரும்… உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும்” என்ற நம்பிக்கையோடு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் எனக்கூறிக் கொண்டு உழைப்பாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் – மாநிலத்தின் தலைநகரை கொலை நகராக மாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சென்னை ஆர்.கே.நகரில் இளைஞர் சரமாரி வெட்டிக்கொலை, மீஞ்சூர் பஜார் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு, தண்டையார் பேட்டையில் அடையாளம் தெரியாத கும்பலால் ஒருவர் படுகொலை என தமிழகத்தின் தலைநகரமான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், கள்ளச்சாராயம், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரத்தால் அடிக்கடி ஏற்படும் குற்றச்சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி குற்றச் சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்கா பறிமுதல் – வேலியே பயிரை மேய்வது போல போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த பழனிசாமி ஆட்சிக்காலத்தில் குட்கா நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறி சட்டப்பேரவைக்கே குட்காவை எடுத்துச் சென்று குற்றம்சாட்டிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது முதலமைச்சரான பின் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. 2000 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி தமிழகத்தில் அடிக்கடி பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வரும் தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் வகையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.