October 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய தேசத்தின் விடுதலைக்காக மக்களை ஒன்று திரட்டி, அகிம்சை வழியில் சத்தியாகிரகத்தையும், ஒத்துழையாமை இயக்கத்தையும் நடத்தி வெற்றிகண்ட தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று. உலக அரங்கில் இந்தியர்களை சுயமரியாதையோடு தலைநிமிரச் செய்த சீர்திருத்தச் செம்மல் மகாத்மா காந்தி அவர்கள் கண்ட ஜாதி, மத பேதமற்ற லட்சிய இந்தியாவை உருவாக்கும் பயணத்தைத் தொடர நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
October 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 4வது அலகில் முகப்பு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணிக்கான சாரம் சரிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
October 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திரையுலகமே வியக்கும் அளவிற்கு நடிப்பு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. தனித்துவமிக்க உடல் மொழியாலும், உணர்ச்சிப்பூர்வ வசனத்தாலும் அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் திரையுலகை ஆண்டதோடு, காலத்தால் அழியாத காவியப் படைப்புகளை கலையுலகத்திற்கு விட்டுச் சென்ற கலைத்தாயின் தவப்புதல்வன் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம்.
September 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவண்ணாமலை அருகே காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் – ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில் இளம்பெண் ஒருவரை அவரது சகோதரியின் கண் முன்னரே காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த குரூரச் சம்பவம் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய காவலர்களால் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் அடியோடு இழக்கச் செய்திருக்கிறது. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
September 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
September 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக பா.ஜ.க வின் மூத்த தலைவரும், அன்பிற்குரிய சகோதரருமான திரு.H.ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.H.ராஜா அவர்கள் பூரண உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
September 27, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டநெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
September 27, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், அறிவார்ந்த செய்திகளின் மூலம் தமிழ் பத்திரிகை உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவருமான தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, சட்டப்பேரவைத் தலைவராக என பல்வேறு நிலைகளில் தமிழ் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக சி.பா ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
September 26, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் குறித்தான திரு சீமான் அவர்களின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக் கடுமையாக இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த இருபெரும் ஆளுமைகளான பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழர் வாழ வேண்டும், தமிழர் பண்பாடு சிறக்க வேண்டும் என்ற அரும்பெரும் குறிக்கோள் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் குறித்தும், ஏழைகள் ஏழைகளாகவே இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்தும் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு தமிழக மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவார்ந்த கொள்கையின் மூலம் புதிய அரசியல் கோட்பாட்டை உருவாக்கி தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமைகளாக திகழ்ந்த இருபெரும் தலைவர்களும் இயற்கையோடு இயற்கையாக கலந்து விட்டாலும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளும், அமல்படுத்திய திட்டங்களும் தமிழக மக்களின் ஆழ்மனதில் நீக்கமற நிறைந்து இன்றளவும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. எனவே, யார் மீதோ கொண்ட வன்மத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி, மறைந்த மாபெரும் தலைவர்கள் மீது நாகரீகமற்ற பேச்சுக்களின் மூலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள திரு சீமான் அவர்கள் இனியும் முயலும் பட்சத்தில் அதற்கான எதிர்வினை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.
September 25, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பதிவுத்துறை அலுவலகங்களில் வாய்மொழி உத்தரவின் படி வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பதாகப் புகார் – பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே பதிவு செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பதிவுத்துறை அலுவலகங்களில் தமிழக அரசு நிர்ணயித்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைவிட 30 சதவிகிதம் வரை உயர்த்தியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிலங்களுக்கான சர்வே எண் மற்றும் தெருவாரியாக வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்து அதற்கான விவரங்களும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கு மாறாக 30 சதவிகிதம் வரை வழிகாட்டி மதிப்பை வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் உயர்த்தியிருப்பதாக வரும் செய்திகள் நிலம் மற்றும் வீட்டு மனை வாங்குவோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரப்படி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவிடமிருந்தோ, தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறையிடமிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, வாய்மொழி உத்தரவு எனும் பெயரில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் வழிகாட்டி மதிப்பு உயர்வை உடனடியாக நிறுத்தி வைப்பதோடு, ஏற்கனவே பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.