மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பூம்புகாரில் தொடங்கவிருந்த “மண்ணின் மக்களின்” நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது – நீர்வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தும் நடைபயணத்தைத் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்கும் நோக்கத்தில் “வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்வோம்” எனும் முழக்கத்தை முன்னிறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பூம்புகார் முதல் தஞ்சாவூர் வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர வேண்டும், கடற்பகுதியில் எரிவாயு – எண்ணெய் கிணறுகள் அமைப்பதை தடைசெய்ய வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவிருந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் திரு.சுல்தான் இஸ்மாயில் அவர்கள் தலைமையிலான குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நீர்வளத்தையும், நிலவளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தும் நடைபயணத்திற்கு அனுமதியை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்? என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நடைபயணத்திற்கு உரிய அனுமதியை உடனடியாக வழங்குவதோடு, பேராசிரியர் திரு.சுல்தான் இஸ்மாயில் அவர்களின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீவிர பற்றாளரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த உறுப்பினருமான திரு.பூமிநாதத் தேவர் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.பூமிநாதத் தேவர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் – கோரிக்கைகளை நிறைவேற்றவோ, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும், சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வை நடத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வாக்குறுதியளிக்கும் திமுக அரசு, அதனை நிறைவேற்றவோ, நடைமுறைப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, மாற்றுத்திறனாளிகளை காலைவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளியுள்ளது. சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் இன்று காலை முதல் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் காலம் தாழ்த்தும் அத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தளராத தன்னம்பிக்கை, இடைவிடாத பயிற்சி மற்றும் கடின முயற்சியால் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை பதிவு செய்திருக்கும் இந்திய அணியின் வீரர், வீராங்கனைகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர்ந்து விளையாட்டு உலகில் புதிய உச்சத்தை தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 37 பேர் கைது – இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மூன்று மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 50 நாட்களில் மட்டும் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுகோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, இன்று மேலும் 37 பேரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என இலங்கை கடற்படையின் தொடர் அராஜகப் போக்கு, தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கிலும், மீன்பிடித் தொழிலில் சுதந்திரமாக ஈடுபடும் வகையிலும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

தமிழக மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரான திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது – கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம், கீழ்மிடாலம், புத்தன்துறை, ஏழுதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் (Indian Rare Earths Limited) நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. கிள்ளியூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த அணுக் கனிம சுரங்கங்களின் மூலம், இயற்கையாகவே அதிக கதிரியக்க தன்மை கொண்ட கிராமங்கள் அதிகளவிலான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் இத்திட்டத்திற்கு அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இனயம், புத்தன்துறை, மிடாலம், மனவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் ஏற்கனவே கடலரிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கடற்கரையோடு, கடல்பகுதியின் வளமும் பெருமளவு பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இத்திட்டத்திற்கு எதிரான குரலை எழுப்பியுள்ளனர். எனவே, அணுக் கனிம சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மக்களுக்கும், மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

திருச்சி துறையூர் அருகே தனியார் உணவகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் – விரிவான விசாரணையின் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செயல்பட்டு வந்த தனியார் உணவகம் ஒன்றில் மதிய உணவுத் திட்டத்திற்காக வழங்கப்படும் அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. துறையூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகி வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வந்தது எப்படி? என்பது குறித்து திருச்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உரிய ஆய்வை மேற்கொண்டு, இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் பட்சத்தில், தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.