தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தொடங்கி, பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் என பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அரசு, அதில் கவனம் செலுத்தாமல் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க முயற்சிப்பது அரசின் ஆணவப் போக்கையே வெளிக்காட்டுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசின் இதுபோன்ற தவறான அணுகுமுறை பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதோடு, தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கும் அரசுப் பேருந்துகள் மீதான அச்சத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. எனவே, இனிமேலாவது அரசின் பிடிவாதப் போக்கை கைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, பொதுமக்கள் தங்களின் பொங்கல் பண்டிகைக்கான பயணத்தை எந்தவிதமான பாதிப்புமின்றி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் தமிழக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. நீண்ட கால, நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் அரசு நிர்வாகம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என சொல்வதற்கு என்ன தகுதியிருக்கிறது என போக்குவரத்துத் தொழிற்சங்கங்க்ளைச் சேர்ந்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆறு அம்ச கோரிக்கைகளில் ஒன்றை கூட ஏற்க மறுக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. பொங்கல் பண்டிகையைட்டி ஏராளமான பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சாதகமாக பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தற்போதிலிருந்தே பன்மடங்கு கட்டணத்தை உயர்த்த தொடங்கிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை பொதுமக்கள் நலன்கருதி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த சென்னை மற்றும் தென்மாவட்ட மக்கள், அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான மாவட்டங்களில் பலத்த கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம், அடுத்த இரு தினங்களுக்கு 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்துடன் முறையான தொடர்பில் இருந்து அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையை சரிவர கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டால் மழை பாதிப்பின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே, அடுத்த இரு தினங்களில் பெய்யக்கூடிய மழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பணியாளர்களுக்கும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் 152 வது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டிருப்பதோடு, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதும், அலைக்கழிப்பதும் திமுக அரசின் தொழிலாளர் நலன் விரோதப் போக்கையே வெளிக்காட்டுகிறது. ஆறு அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றால் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, பொதுமக்கள் பொங்கல் பண்டிகையின் போது எவ்வித சிரமமுமின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் 369 பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில், அம்மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள், தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்து, எழுத்துத் தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேர்வாணையம் முழுவீச்சில் தயாராகி வருவது கண்டனத்திற்குரியது. அரசுப் பணிக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் மழை, வெள்ளத்தாலும், காவிரி நீரை உரிய நேரத்தில் பெற முடியாத காரணத்தினால் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பெருமளவு விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத் தொகை, பலருக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும், டோக்கனில் தொடங்கி ரொக்கப் பணம் வழங்குவது வரை ஆளுங்கட்சியினரின் தலையீடு இருந்ததால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நேரத்தில், தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு சார்பாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்குவதோடு, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகை முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக நுகர்வோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது. 518 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் சுமார் 70 கிராம் வரை குறைவான எடையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் ஆவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் என பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தி கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாத வகையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் பால் பாக்கெட்டுகளின் எடை சரியான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆவின் நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.