தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் பிரபாகரன், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார்த்திக், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கருப்பாயூரணி கார்த்திக் என முதலிடம் பிடித்த மூன்று வீரர்களுக்கும், தீரத்துடன் களமாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், தங்களுக்கு வழங்கப்படும் கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களுக்கு பதிலாக தங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை அரசு இந்த ஆண்டிலாவது பரிசீலனை செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை வளர்ப்போருக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் 373 வது தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் வகையிலும் அரசுப் பணி வழங்குவதோடு, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தேசிய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் நடப்பு உலகச் சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இளம் வயதிலேயே சதுரங்க உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கி அதில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா அவர்கள், உலகளவில் அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் நூறு இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நகரம் கூட இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள தூய்மையான நகரங்களின் பட்டியலில் திருச்சி 112 வது இடத்தையும், சென்னை 199 வது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதல் நூறு தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுவந்த சென்னை, நடப்பாண்டில் 199 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் சென்னை மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. சாலை, மெட்ரோ மற்றும் மழைநீர் வடிகால் ஆகிய மூன்று பணிகளும் முறையான திட்டமிடலின்றி ஒரே நேரத்தில் நடைபெறுவதாலே சென்னை மாநகராட்சியில் மாசு அதிகரிக்க காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த பழனிசாமி ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தன் அறிக்கையை சமர்ப்பித்து ஓராண்டை கடந்த நிலையிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது திமுக அரசின் மீதான சந்தேகத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே, தூய்மை, குப்பை சேகரிப்பு, சுகாதாரம், கழிவுநீர் அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தரையை துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியை (Mop Stick) குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட அம்மருத்துவமனையில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தரையை துடைக்க உதவும் மாப் குச்சியை (Mop Stick) குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தும் புகைப்படம் சுகாதாரத்துறையின் அவலநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என எழுந்த அடுக்கடுக்கான புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே மருத்துவமனைகளில் நடைபெறும் தொடர் சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தேவையான அடிப்படை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி டெல்டா பகுதிகளில் பெய்த கனமழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. கனமழையால் சேதமடைந்திருக்கும் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு அதற்கான உரிய இழப்பீடு தொகையை வழங்குவதோடு, பயிர்க்காப்பீடு செய்திருக்கும் பயிர்களுக்கான இழப்பீட்டையும் விரைந்து பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயிகளின் பாதிப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான இழப்பீடை உடனடியாக வழங்குவதோடு, ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது விளைநிலங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தொடங்கி, பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் என பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அரசு, அதில் கவனம் செலுத்தாமல் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க முயற்சிப்பது அரசின் ஆணவப் போக்கையே வெளிக்காட்டுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசின் இதுபோன்ற தவறான அணுகுமுறை பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதோடு, தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கும் அரசுப் பேருந்துகள் மீதான அச்சத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. எனவே, இனிமேலாவது அரசின் பிடிவாதப் போக்கை கைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, பொதுமக்கள் தங்களின் பொங்கல் பண்டிகைக்கான பயணத்தை எந்தவிதமான பாதிப்புமின்றி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.