புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, பெற்றோர்கள் புகார் அளித்த பின்பும் அலட்சியமாக செயல்பட்டதே சிறுமியின் கொலைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதுச்சேரி மாநிலம் முழுவதுமே அண்மைக்காலமாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவே இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் புதுச்சேரி மாநில அரசை வலியுறுத்துகிறேன்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை வேரறுக்க முடியாத அளவிற்கு கொண்டு சென்ற தமிழக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மதுரை இரயில் நிலையம், சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுக்கும் சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வரும் போதைப் பொருட்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் அதிகரிக்கும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் – பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். வீதிக்கு வீதி திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதோடு, தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதன் விளைவாக நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மற்றும் சென்னையில் ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது – தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மதுரையில் நடத்திய சோதனையில் 30கிலோ எடையிலான போதைப் பொருள் ஒரே நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் எனும் திமுக முன்னாள் நிர்வாகி உட்பட பலர் தேடப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுரை ரயில் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழகம் முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசின் அலட்சியப்போக்கால், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மதுரையில் போதைப் பொருள் கடத்திய நபரை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி பின்னணியில் செயல்பட்டவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத் தருவதோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இனியாவது போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி ஆலை தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்ற விதிமீறல்களுக்கும், பழனிசாமி ஆட்சிக் காலத்தின் போது ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பறிபோன 13 உயிர்களுக்கும் நீதி வழங்கும் வகையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது முழுமையாக நடவடிக்கையை தமிழக அரசு விரைவில் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்போடு தங்களின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை அச்சமோ, பதற்றமோ இல்லாமல் மன உறுதியுடன் மாணவர்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். மிகுந்த தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வருங்காலத்தில் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை தேடித்தரும் சாதனையாளர்களாக உருவெடுக்க மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.