சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாழடைந்த நிலையில் பயனற்று இருக்கும் இதய தெய்வம் அம்மா அவர்களின் பெயரிலான விளையாட்டு அரங்கம் – விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. சென்னை அண்ணாநகர் மண்டலம் கீழ்ப்பாக்கம் பகுதியில் இதயதெய்வம் அம்மா அவர்களின் பெயரில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம் முறையான பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு பயன்பாடின்றி பூட்டியே இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு மைதானங்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், உள் மற்றும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம், வீரர்கள் தங்குமிடம்,பார்வையாளர்கள் மாடம் என அனைத்து வசதிகளும் கொண்ட இந்த மைதானத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பூட்டியே வைத்திருப்பது விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி,அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உடற்பயிற்சிக் கூடம் என மக்கள் நலனுக்காக இதயதெய்வம் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை முடக்குவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது அவரின் பெயரிலான விளையாட்டு அரங்கத்தையும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மூடியே வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களுக்கும், மாநிலத்திற்கும் எந்தவகையிலும் பயன்படாத சர்வதேச கார் பந்தயம் நடத்துவதற்கும், விளம்பரத்திற்காகவும் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வீணடிக்கும் திமுக அரசு, சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து வகையிலும் உகந்த இடமான இந்த மைதானத்தை சீரமைக்க தயங்குவது ஏன்? என்ற கேள்வியை விளையாட்டு வீரர்கள் எழுப்புகின்றனர் எனவே, விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாழடைந்த நிலையில் பயன்பாடற்று கிடக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களின் பெயரிலான விளையாட்டு அரங்கத்தை சீரமைப்பதோடு, அதனை விரைவாக விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை விருகம்பாக்கத்தில் அனுமதியில்லா இடத்தில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் போஸ்டர் மீது மூதாட்டி ஒருவர் செருப்பு வீசிய காட்சிகளை பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி பொதுமக்களின் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிய முதலமைச்சருக்கு பாராட்டு விழாவா நடத்த முடியும்? சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சரின் போஸ்டர் மீது மூதாட்டி ஒருவர் செருப்பை வீசி மண்ணை தூற்றிய வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறி இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களையும், இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தையே சீர்குலைக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருள் விற்பனையையும் தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, சமூக வலைத்தளங்களில் அரசையும், முதல்வரையும் விமர்சிப்போரை தேடித் தேடி கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பால் விலை உயர்வில் தொடங்கி மின்சாரக் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி பொதுமக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றி, தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட போராடும் சூழலை உருவாக்கிய முதலமைச்சர் மீது மண்ணை தூற்றி வீசாமல் மாலை அணிவித்து பாராட்டு விழாவா நடத்த முடியும் ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞரை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, சம்பந்தப்பட்ட மூதாட்டி மீதான புகாரில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக துறைத்தலைவர்கள் மீது புகார் – கல்லூரி மாணவிகளே புகார் அளித்த பின்பும் குறைந்தபட்ச விசாரணையைக் கூட நடத்த தயங்குவது யாரை பாதுகாப்பதற்காக ? திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும், பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அக்கல்லூரியைச் சேர்ந்த பொறுப்பு முதல்வர் மீதும், பல்வேறு துறைகளின் தலைவர்களின் மீது மாணவிகளே அளித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, துணைமுதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்திருக்கும் நிலையில், அந்த புகாரின் மீது குறைந்தபட்ச விசாரணையை கூட நடத்த மறுப்பது யாரை பாதுகாப்பதற்காக ? என்ற கேள்வி எழுந்துள்ளது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, தற்போது திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் எழுந்திருக்கும் இந்த புகார், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், நற்பண்பையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும், அது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்த பின்னரும் கண்டும் காணாதது போல திமுக அரசு கடந்து செல்வதும் உயர்கல்வி பயிலவே அச்சப்படும் சூழலை உருவாக்கியிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி பொறுப்பு முதல்வர் உட்பட பல்வேறு துறைத்தலைவர்கள் மீது மாணவிகள் அளித்திருக்கும் புகார் மீது தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மதுரை மாவட்டம் மேலூரில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத புதிய பேருந்து நிலையம் – பொதுமக்கள் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசு நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் மேலூரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகள் முழுமையாக முடிந்த பின்னரும் திறக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால், பள்ளிக்குழந்தைகள் தொடங்கி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினருமே வெயிலிலும், மழையிலும் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 6.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் மதுரை மேலூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு.மன்மோகன்சிங் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பெரும்பங்கு வகித்த திரு.மன்மோகன் சிங் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஆயிரக்கணக்கான உயிர்களையும், கணக்கிலடங்காத உடமைகளையும் பறித்துச் சென்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் எக்காலத்திற்கும் அழியாத வடுக்களாக பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் நினைவு தினம் இன்று. ஆண்டுகள் பல கடந்தாலும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தற்போது வரை மீண்டு வர முடியாத நிலையிலும், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலாலும், அராஜகத்தாலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக மீனவ மக்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, அவர்களின் மேம்பாட்டிற்கு தேவையான நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திட முன்வர வேண்டும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.