May 12, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் உயிரையும், சுகாதாரத்தை பேணிக்காப்பதிலும் மருத்துவ சமுதாயத்தின் உயிர்நாடியாக திகழ்ந்து கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த செவிலியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம் செய்தல், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என மருத்துவத்துறையில் தொடரும் நீண்டநாள் குறைபாடுகளை களைந்து தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் நம் உயிரை காக்கும் செவிலியர்கள் அனைவரும் மனநிறைவுடன் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்நாளில் வலியுறுத்துகிறேன்.
May 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காத CPCL நிறுவனத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் – அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. நாகப்பட்டினம் CPCL எண்ணெய் நிறுவன விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளை கடந்த நிலையிலும், அந்த நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை என நிலத்தை இழந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், CPCL நிறுவனம் சார்பாக எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக அறவழியில் போராடிக் கொண்டிருந்த பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நிலம் கையகப்படுத்துவதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் முழுமையாக கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
May 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அன்பின் அடையாளமாக, அனைத்து உறவுகளுக்கும் அடிப்படையாக, ஆயுள் முழுவதும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அன்னையர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
May 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வனப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது –பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து, கோம்பு ஆகிய வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளை வனத்துறையினர் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. வனப்பகுதிகளில் தங்கி கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் பூர்வகுடிகளின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, உடமைகளை உடைத்தெறிந்திருப்பதுடன், குடியிருப்புவாசிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றியிருக்கும் வனத்துறையின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தலைமுறை, தலைமுறைகளாக வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கத் தவறிய திமுக அரசு, வனத்துறையின் மூலம் வன்முறையை கையாண்டு பூர்வகுடிகளை அப்புறப்படுத்தியிருப்பது தமிழக அரசின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் பூர்வகுடிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில், அவர்கள் விரும்பும் வனப்பகுதியிலேயே வசிப்பதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என வனத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
May 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை இருமடங்காக அதிகரிப்பு – நியாயவிலைக்கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அபராதத் தொகை உயர்வுக்கான அறிவிப்பை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நியாயவிலைக்கடைகளில் அதிகாரிகள் நடத்தும் சோதனைகளின் போது ஏற்படும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவுக்காக, சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை அரசு இருமடங்காக உயர்த்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடையின் அளவு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி பலமுறை அளிக்கப்பட்ட புகார்மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தற்போது அபராதத் தொகையை உயர்த்தி புகார் அளித்த ஊழியர்கள் மீதே கூடுதல் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவால் விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரித்திருப்பதால், தங்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை அபராதத்திற்கே சென்றுவிடும் சூழல் உருவாகியிருப்பதாகவும், தமிழக அரசின் இந்த புதிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, நியாயவிலைக்கடை ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, கிடங்குகளில் இருந்து நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
May 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்டம் சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட V.சொக்கலிங்காபுரம் கிளைக் கழகச் செயலாளர் திரு.கு.காளீஸ்வரன் அவர்கள் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வந்த திரு.கு.காளீஸ்வரன் அவர்களை இழந்து வாடும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
May 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக்கல்வியின் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவரும், மேல்நிலைக் கல்வியில் தங்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து வாழ்வில் சிறந்து விளங்கவும், தேர்ச்சி வாய்ப்பை இழந்த மாணவ, மாணவியர்கள், துணைத்தேர்வுகளின் மூலம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மேல்நிலைக் கல்வியை தொடரவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
May 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அன்புச் சகோதரர் மேலூர் திரு.ஆர்.சாமி அவர்களுக்கு நினைவஞ்சலி!
May 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் விபத்துக்களால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்- ஏழைத் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்குவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். தற்போது விபத்து நடைபெற்றிருக்கும் செங்கமலப்பட்டியில் பட்டாசு உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் சுவடுகள் மறைவதற்குள் மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பதும் அதில் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளாலும், பலமுறை சுட்டிக்காட்டியும், அலட்சியம் காட்டும் அரசு நிர்வாகத்தினாலும் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு, அபாயகரமான பணி என தெரிந்தும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் அப்பாவி தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
May 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாதுகாப்பில்லாத கொள்முதல் நிலையங்களால் தொடர் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் – செஞ்சி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் நெல்மூட்டைகள் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இயற்கை பேரிடர்கள், பொய்த்துப் போன பருவமழை, பயிர்க்காப்பீடு பெறுவதில் சிக்கல், தண்ணீர் பற்றாக்குறை, மும்முனை மின்சாரத்திற்கு தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இரவு, பகல் பாராமல் பாடுபட்டு விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுகாக்கத் தவறிய உணவுத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விற்பனைக்காக கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவதும், எந்தவித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நீண்ட நாட்கள் தேக்கி வைப்பதுமே நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, செஞ்சி நெல்கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவரும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், தாமதமாகும் பட்சத்தில் கொட்டகை அமைத்து மழையில் பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.