நூற்றாண்டு கண்ட மாஞ்சோலை எஸ்டேட் மூடப்படுவதால் வேலையிழக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் – தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை எஸ்டேட்டிற்கான மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடையவிருக்கும் நிலையில், தலைமுறை தலைமுறையாக அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எண்ணற்ற அடக்குமுறை, சுரண்டல்களை எதிர்கொண்டு காலம் காலமாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதால், தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி சொந்தமாநிலத்திலேயே அகதிகளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. கூலி உயர்வு கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊர்வலம் சென்ற தொழிலாளர்கள் மீது இதே திமுக அரசின் காவல்துறை நடத்திய தடியடியில், தாமிரபரணி ஆற்றில் குதித்து 17 பேர் உயிரிழந்த துயரம் அரங்கேறி கால் நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் துளியளவும் மேம்படவில்லை என்பதை தற்போதைய சூழல் உணர்த்துகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களைப் போல மாஞ்சோலை எஸ்டேட்டையும் தமிழக அரசே ஏற்று நடத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தேயிலை பறிப்பதை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வேலையுடன், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவிருந்த தமிழக பிரதிநிதிகளுக்கு டெல்லி செல்ல தடை விதித்து, ஆன்லைன் வாயிலாக மட்டுமே பங்கேற்க வேண்டும் என தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உணராத திமுக அரசு, அக்கூட்டத்திற்கு தமிழக பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பி மாநிலத்தின் உரிமையை கோராமல், ஆன்லைன் மூலமாக பங்கேற்க வைத்து வேடிக்கை பார்க்க வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான காவிரி நீரையே இதுவரை முழுமையாக பெற முடியாத சூழலில், தமிழகத்திற்கான நீரை கேட்டுப்பெற வேண்டிய காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, நம் மாநில உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு தாமாக முன்வந்து நாமே தாரைவார்த்து கொடுப்பதற்கு சமமாகும். எனவே, காவிரி ஆணையக் கூட்டங்களில் நேரில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக நீக்கி, இனி வரும் காலங்களில் நடைபெறும் காவிரி தொடர்பான அனைத்துக் கூட்டங்களில் தமிழக பிரதிநிதிகளை பங்கேற்கச் செய்து தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம் – மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை வழக்கம்போல அலட்சியமாக எதிர்கொள்ளாமல், கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதோடு, கனமழை தொடரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள், மீட்பு மற்றும் நிவாரண முகாம்கள் முன்கூட்டியே தயாராக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், வானிலை ஆய்வு மையத்துடன் முறையான தொடர்பில் இருந்து, அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையை சரிவர கண்காணித்து அடுத்து வரும் சில தினங்களில் பெய்யக்கூடிய மழையின் அளவை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதோடு, மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசின் யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் பாதிப்புக்குள்ளாகும் மலைவாழ் மக்கள் – வனத்துறையால் அவசரகதியில் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு அறிக்கையை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசின் வனத்துறையின் சிறப்புக்குழுவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், ஓவேலி, முதுமலை ஆகிய வனச்சரகங்களை ஒட்டிய சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், நெருக்கடியான யானை வழித்தடங்களை அடையாளம் காணுதல், யானைகளுக்கான நீர் ஆதாரம் உள்ளிட்டவைகள் அத்தியாவசியமானது என்றாலும், முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் மலைவாழ் பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கை கடும் கண்டத்திற்குரியது. வனத்துறை மூலமாக தயாரிக்கப்பட்ட யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை, ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருப்பதோடு, அதற்கான கருத்துக்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு குறுகிய அளவு கால அவகாசம் மட்டுமே வழங்கியிருப்பது பன்னெடுங்காலமாக மலைப்பகுதிகளில் வசித்து வரும் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் செயலாகும். எனவே, தமிழக அரசின் வனத்துறையால் அவசரகதியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை உனடியாக திரும்பப் பெறுவதோடு, முறையான ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து, உரிய கால அவகாசம் வழங்கி, பொதுமக்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின்னரே இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் உயிரையும், சுகாதாரத்தை பேணிக்காப்பதிலும் மருத்துவ சமுதாயத்தின் உயிர்நாடியாக திகழ்ந்து கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த செவிலியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம் செய்தல், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என மருத்துவத்துறையில் தொடரும் நீண்டநாள் குறைபாடுகளை களைந்து தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் நம் உயிரை காக்கும் செவிலியர்கள் அனைவரும் மனநிறைவுடன் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்நாளில் வலியுறுத்துகிறேன்.

விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காத CPCL நிறுவனத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் – அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. நாகப்பட்டினம் CPCL எண்ணெய் நிறுவன விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளை கடந்த நிலையிலும், அந்த நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை என நிலத்தை இழந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், CPCL நிறுவனம் சார்பாக எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக அறவழியில் போராடிக் கொண்டிருந்த பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நிலம் கையகப்படுத்துவதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் முழுமையாக கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.