முதலமைச்சரின் தனிப்பிரிவில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்களால் ஊழியர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமை – அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை நிரப்பும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்போது ? பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டிய முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் பிரிவு அலுவலர், தட்டச்சர், உதவியாளர் என 40 சதவிகிதம் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் முதன்மை அமைச்சரான முதலமைச்சரின் அலுவலகத்திலேயே காணப்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வராத திமுக அரசு, மற்ற துறைகளில் காலியாக இருக்கும் லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்களை எப்படி நிரப்பும் ? என்ற கேள்வி பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது. அரசுப் பணியை எதிர்பார்த்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் மிகக்குறைவான காலிப்பணியிடங்களோ யானைப்பசிக்கு சோளப்பொரி என்பது போல் அமைந்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 187வதாக இடம்பெற்றுள்ள தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3.5 லட்சம் இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்படாத காரணத்தினால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் சேவைகளும் உரிய நேரத்தில் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் நிலவக்கூடிய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழக இளைஞர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது ? – உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தீவிரப்படுத்தி இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்திற்கு சாதகமான தீர்ப்பினை தமிழக அரசு பெற வேண்டும். தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அண்மைக்காலமாக போதைப் பொருட்களின் பழக்கம் அதிகரித்துவருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கும் அடிமையாகி பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர், காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரி மாணவர், கும்பகோணம் தனியார் விடுதி மேலாளர் என ஐந்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய சட்டப்பிரிவுகளை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவுப்படுத்த தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரப்படுத்துவோர் மற்றும் தொடர்புடைய விளம்பர நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை போலவே பயனற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனியும் அலட்சியமாக செயல்படாமல் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை விரைவு படுத்துவதோடு, அவ்வழக்கில் வலுவான வாதங்களை முன்வைத்து ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற்று இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய அப்பாவி மக்களுக்கு அரங்கேற்றப்படும் அவலங்கள் – முழுவதுமாக செயலிழந்துவிட்ட சுகாதாரத்துறையை மீட்டெடுத்து சீரமைப்பது எப்போது ? ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் (Stecher) வழங்க அலைக்கழித்த காரணத்தினால், சிகிச்சைக்காக வந்த மூதாட்டியை அவரின் மகளே தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதியின்மை, மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, என எழும் தொடர் புகார்களை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி அலைக்கழிக்கப்படும் அவலச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர், விளம்பரத்தில் மட்டுமே அதீத ஈடுபாடு கொண்டிருப்பதால் இனியும் அரசு மருத்துவமனைகளை நம்பி பயனில்லை என்ற சூழலுக்கு அடித்தட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவையான மருத்துவ வசதியை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, செயலிழந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுத்து சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னை தாம்பரம் அருகே நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொலைச்சம்பவங்கள் – குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவல்துறை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது ?  சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர், செங்கல் சூளைதொழிலாளி மற்றும் குரோம்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் என நேற்று ஒரே இரவில்மூன்று பேர் அடுத்தடுத்து கொலை, நுங்கம்பாக்கத்தில் திரைப்பட புகைப்பட கலைஞர் ஒருவரைசரமாரியாக வெட்டிவிட்டு செல்போன் பறிப்பு என வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்தஅதிர்ச்சியளிக்கின்றன.  தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்லாது எங்கு பார்த்தாலும் நாள்தோறும் அரங்கேறும்கொலை, கொள்ளை, திருட்டு,போதைப்பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களால்பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுவேமூன்றாண்டு கால திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு சிறந்த உதாரணம்.  சட்டம் ஒழுங்குகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய காவல்துறையோ, குற்றச்சம்பவங்களுக்கும்தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல, ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஏவல்துறையாக மட்டுமேசெயல்பட்டுவருவது கடும் கண்டனத்திற்குரியது.  எனவே, ஆழ்ந்தஉறக்கத்தில் இருக்கும் காவல்துறையை இப்பொழுதாவது தட்டியெழுப்பி தமிழகத்தில்அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய நடவடிக்கைஎடுப்பதோடு, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் மூடப்படும் தமிழ்த்துறைகள் – தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை உலகறிய உதவும் தமிழ்த்துறைகள் தடையின்றி செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஐதராபாத், உஸ்மானியா, பெங்களூரு, மைசூரு மற்றும் மும்பை பல்கலைக்கழகங்களில் இயங்கிவரும் தமிழ்த்துறைக்கான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தினால் அத்துறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்ய முடியாத சூழல் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, பஞ்சாப், லக்னோ, அலகாபாத், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகள் அடுத்தடுத்து மூடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை காரணமாக கொண்டு தமிழ்த்துறைகள் மூடப்படுவது தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகவும், தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும் திகழும் தமிழ் மொழியின் தொன்மை, பண்பாடு, நாகரீகத்தை உலகறியச் செய்யவும், தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் வாழ்வியலையும் வெளிக்கொண்டுவரும் நோக்கத்தில் அண்டைமாநில பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்ட தமிழ்த்துறைகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமானதாகும். எனவே, நம் இனத்தின் அடையாளமான தனித்துவமிக்க தமிழ் மொழியை பாதுகாக்கும் நோக்கில், அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் தமிழ்த்துறைகளுக்கு தேவையான பேராசிரியர்களை நியமித்து, அத்துறைகள் தடையின்றி செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

வெளிச்சந்தையில் தொழிற்துறையினர் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்கும் மின்வாரியத்தின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரை முற்றிலுமாக முடக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்தில் உயரழுத்த மின்பிரிவில் இடம்பெறும் நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ஏற்கனவே வசூலிக்கப்படும் 1.96 ரூபாயுடன் கூடுதலாக 34 காசுகள் வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் நிறுவனங்களிடமிருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் மின்சார வாரியம், உயர் அழுத்த மின் நுகர்வோர் தங்களின் தேவைக்காக வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிப்பது எந்தவகையில் நியாயம் ? என தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு (221), மின்சார நிலைக் கட்டணம் ரத்து (222), உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, தன் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மீதான விரோதப் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் கடும் இன்னல்களுக்குள்ளாகி பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவு தொழில்துறையை முற்றிலுமாக முடக்கக்கூடிய செயலாகும். எனவே, மின்சாரச் சந்தையில் தொழில்துறையினர் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, குளறுபடிகள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் நிறைந்திருக்கும் மின்வாரியத்தை மறுசீரமைத்து வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் கலைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது – ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு அச்சங்கம் தொடர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சுனாமி எனும் ஆழிப்பேரலையில் சிக்கி தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 13 மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இயங்கி வரும் தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு கலைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுய உதவிக்குழுக்களை அமைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தொழிற்கடன் வழங்குதல் என பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து வந்த தமிழ்நாடு நிலைத்த வாழ்வாதார சங்கம் திடீரென கலைக்கப்பட்டிருப்பதால், அதில் பணியாற்றி வந்த 50க்கும் அதிகமான பணியாளர்களுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. சுனாமி பேரலை தாக்கி ஆண்டுகள் பல கடந்தாலும், அதனால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மீள முடியாத சூழலில், தங்களின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வந்த சங்கம், அரசின் கொள்கை முடிவு எனக்கூறி கலைக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, 13 கடலோர மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை தொடர அனுமதித்து, அத்திட்டத்தில் பணிபுரிந்த 50க்கும் அதிகமான ஒருங்கிணைப்பாளர்களோடு சேர்த்து ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.