தமிழகத்தில் மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வு – நிர்வாகத் தோல்வியை மறைக்க பொதுமக்களின் மீது சுமையை ஏற்றும் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திரு.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணைக் கைதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை – காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் என்பவர், சென்னை மாதவரம் அருகே தப்பியோட முயன்ற போது காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என அவரது குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், தமிழக காவல்துறை அரங்கேற்றியிருக்கும் என்கவுண்டர் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கொலை நடந்த அன்றே தாமாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்த விசாரணைக் கைதி திருவேங்கடம், தப்பியோட முயன்றதன் காரணமாகவே சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முன்பின் முரணாக அமைந்துள்ளது. எனவே, விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – இனியும் மவுனம் காக்காமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடி மாநிலத்தின் உரிமையையும், டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். தமிழகத்திற்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி வீதம் காவிரி நீரை வழங்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதோடு, தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்கள் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உச்சத்தை எட்டிய பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை தர மறுப்பது கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகள் வரலாறு காணாத அளவிற்கு வறட்சியை சந்தித்து வரும் நிலையில், குறுவை சாகுபடியை தொடர்ந்து சம்பா சாகுபடியும் போதிய நீரின்றி பாதிக்கப்பட்டிருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் தெளிவான உத்தரவை பிறப்பித்த பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை பெற எந்த வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கே, இன்றைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என அம்மாநில முதலமைச்சர் அவர்கள் ஆணவப்போக்குடன் கூறும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இனியும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காக்காமல், கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கை நீதிமன்றம் மூலம் எதிர்கொண்டு தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான சேவை இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – அரசு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான சுகாதாரத்துறையின் அரசாணை எண் 151ஐ உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட ஒருசில முதுநிலை படிப்புகளைத் தவிர, பிறதுறைகளில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கான சேவை இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு மருத்துவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயில தடைவிதிக்கும் திமுக அரசின் இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய பொதுமக்களின் நலனுக்கும் எதிராக அமைந்துள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கும் வகையிலும் புதிய பணியிடங்களை உருவாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிப்பது எந்தவகையில் நியாயம் ? என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளை பலவீனப்படுத்துவதோடு, மாநிலத்தின் பொது சுகாதாரத்துறையின் அடிப்படை கட்டமைப்பையே சீர்குலைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அரசாணை எண் 151ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டியதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த இரு வாரங்களில் மட்டும் 40க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, ஒவ்வொருமுறை மீனவர்கள் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை இனியும் தொடராமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்திய ஏழு பேருக்கு உடல்நலக்குறைவு – மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களில் 7 பேர் உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள்ளாகவே, புதுச்சேரி மலிவு விலை சாராயத்தை அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம் சாராய விற்பனையை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே புதுச்சேரி சாராயத்தை அருந்தி உயிரிழந்ததாக வந்த செய்தியை மூடி மறைக்க முயன்ற திமுக அரசு, அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இன்று மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன. எனவே, இனியும் இது போன்று அலட்சியப் போக்குடன் செயல்படாமல் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை தடுக்க எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களின் உயிரை காப்பதற்காக கட்டப்படும் அரசு மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் தரமற்ற முறையிலும், உரிய கண்காணிப்பின்றியும் நடைபெறுவதே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, அரசு மருத்துவமனைக்கான கட்டடப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதோடு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.