பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் இந்திய இணை மனுபாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை எனும் வரலாற்றுச் சாதனை புரிந்த மனுபாக்கர் மற்றும் இந்தியாவிற்கு இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்த சக வீரர் சரப்ஜோத் சிங் ஆகியோர் அடுத்தடுத்து வெற்றிவாகை சூட எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில்வரியை 35 சதவிகிதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தனி நபர் தொடங்கி தனியார் நிறுவனங்கள் வரை பாதிப்புக்குள்ளாக்கும் சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் தங்களின் வருமானத்திற்கேற்ப செலுத்தும் தொழில்வரியை 35 சதவிகிதம் வரை உயர்த்தி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி ஏழை, எளிய மக்களின் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிய திமுக அரசு, தற்போது தொழில்வரியையும் 35 சதவிகிதம் வரை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தொழில்வரி உயர்வுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஒரே சீரான தொழில்வரி நிர்ணயம் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி வழங்கியிருக்கும் பரிந்துரையால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தொழில்வரியை 35 சதவிகிதம் வரை உயர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தனி நபர் தொடங்கி, தனியார் நிறுவனங்கள் வரை பாதிப்புக்குள்ளாக்கும் தொழில்வரி உயர்வு தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் – காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீரை சேமித்து வைக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தெளிவான உத்தரவை பிறப்பித்த பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க முன்வராத கர்நாடக அரசு, தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக உபரிநீரை திறந்துவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கான காவிரி நீரை திமுக அரசு கேட்டுப்பெற தவறியதன் மூலமாகவும் காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாசன சாகுபடியின் பரப்பளவு பெருமளவு குறைந்திருப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆற்றுப் படுகைகள் முறையாகவும், முழுமையாகவும் தூர்வாரப்படாத காரணத்தினால் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் பாசனத்திற்கு பயனில்லாமல் வீணாக கடலில் கலக்கும் சூழல் உருவாகியிருப்பதாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டிருக்கும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தும் வகையில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள உபரி கால்வாய்களை திறந்து ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயிகளின் தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும், இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கேரள மாநில அரசையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பட்டமைன்(Methamphetamine) எனும் கொடிய வகை போதைப் பொருள் பறிமுதல் – இளைய சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பது எப்போது? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம் மூலமாக இலங்கைக்கு கடத்தவிருந்த 6 கிலோ எடை கொண்ட மெத்தம்பட்டமைன் (Methamphetamine) எனும் கொடிய வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக செங்குன்றம் அருகே போதைப் பொருட்களை பதுக்கி வைப்பதற்காகவே தனி குடோன் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தாரளமாகக் கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், இளைய சமுதாயத்தினர் என அனைத்து தரப்பினரும் அடிமையாகி வருவது அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைச் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், தற்போது 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் சர்வசாதாரணமாக பேருந்துகள் மூலமாகவே கடத்தப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி, இந்த கடத்தல் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

ஜனநாயக முறையில் போராட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பறிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றும் வகையிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை மற்றும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து போராடிவரும் ஆசிரியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத திமுக அரசு, பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படை கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி ஜனநாயக முறையில் போராட முயன்ற ஆசிரியர்களை ஒடுக்க முயற்சிப்பது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்றாண்டுகளை கடந்த பின்பும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதோடு போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை குற்றவாளிகளை போல கைது செய்வது எந்த வகையில் நியாயம்? என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, கைது செய்யப்பட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பாதிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய வீராங்கனை மனு பாக்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்திருக்கும் மனு பாக்கர் அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலகளவிலான போட்டிகளில் வெற்றி வாகைசூடி விளையாட்டு உலகில் உச்சம் தொட எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் தென்கோடியான ராமேஸ்வரத்தில் பிறந்து தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலகமே வியக்கும் அளவிற்கு பல்வேறு சாதனைகளை புரிந்த இந்தியாவின் ஏவுகணை நாயகரும் குடியரசு முன்னாள் தலைவருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. இளம் தலைமுறையினருக்கு ஊக்கமூட்டும் உந்து சக்தியாக, புகழ்பெற்ற அறிவியல் அறிஞராக, நாட்டுமக்களின் அன்பிற்குரிய குடியரசுத் தலைவராக என ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டியாக திகழ்ந்த பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவரது நினைவுநாளான இந்நாளில் உறுதியேற்போம்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் அப்பட்டமான மனித உரிமை மீறல் – தடைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தொழிலாளர்கள் சுத்தம் செய்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் நவீன விஞ்ஞான உலகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் மனிதக் கழிவுகளையும், பாதாள சாக்கடைகளையும் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது. இந்திய அளவில் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மரணத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வரும் அவல நிலையிலும், அதனை தடுக்கவோ, மாற்றுவழிகளை கண்டறியவோ எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாநில அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும், அதனை அமல்படுத்த அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவும் வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதையும் அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற அவலச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. எனவே, இனியாவது மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தை தீவிரப்படுத்துவதோடு, அப்பாவி தொழிலாளர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.