சென்னை தாம்பரம் – முடிச்சூர் சாலையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு – காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர், தாம்பரம் – முடிச்சூர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அப்பகுதியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவலரின் செயினை பறித்துவிட்டு தப்பியோடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சேலையூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என அடுத்தடுத்து எட்டு இடங்களில் அதே கொள்ளையர்கள் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை பார்க்கும் போது தமிழகத்தில் காவல்துறை முற்றிலும் முடங்கியுள்ளதா ? அல்லது முடக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதற்காக பொதுமக்களை கைது செய்து பழிவாங்குவதா ? ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலரை வீடுபுகுந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பின் போது தங்களை சந்திக்க வராத அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்களை காவல்துறையினர் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சாத்தனூர் அணையிலிருந்து முன் அறிவிப்பின்றி திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் இரவோடு இரவாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு முறையான நிவாரணம் கூட வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட்ட மக்கள் மீதே மீண்டும் அடக்குமுறையை கையாண்டிருப்பது திமுக அரசின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் அப்பகுதி மீதான பழிவாங்கும் நடவடிக்கையையும் கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது – பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் நோயாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மாநிலத்தின் தலைநகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் பிரதான அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளாகவே பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசு மருத்துவமனையில் நடைபெற்றிருக்கும் இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என பெயரளவில் சொல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொதுமக்கள் பாதிப்பு – அனைத்து பயனாளிகளுக்கும் விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்போடு வழங்க வேண்டிய விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படாத காரணத்தினால் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறாதது ஏமாற்றம் அளித்தநிலையில், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் விலையில்லா வேட்டி, சேலையையும் முறையாக விநியோகம் செய்யப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக தொடங்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற ஆண்டு முதல் முடக்கும் வகையிலேயே செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு முன்கூட்டியே விநியோகிக்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளில் 50 சதவிகிதம் கூட விநியோகிக்கப்படாமல் இருப்பதே, தற்போது ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு உரிய வேட்டி,சேலைகளை உடனடியாக அனுப்பி வைப்பதோடு, அவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். “சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்ப, உலகின் அனைத்து தொழில்களுக்கும் முதன்மைத் தொழிலாக விளங்கும் உழவுத் தொழிலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் உழவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியை தெரிவிக்கும் நாளே பொங்கல் திருநாள் ஆகும். அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எத்தனையோ பேரிடர்கள், துயரங்களுக்கு மத்தியில் உலகத்திற்கே உணவளிக்கும் உன்னத பணியை இடைவிடாது மேற்கொண்டிருக்கும் உழவர்களை போற்றி வணங்குவதோடு, அவர்களின் வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும் எனக்கூறி தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.