சென்னை மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கிய ஒரு நாள் மழை – அடுத்தடுத்த மழை, வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை எப்படி பாதுகாக்கப் போகிறது தமிழக அரசு? சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் மாநகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக முடங்கியிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி அறிவிப்புகளையும், அறிக்கைகளையும் வெளியிட்ட தமிழக அரசு, மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு இன்றைய நிகழ்வுகளே சாட்சியாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போதும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரின் போதும் பெரும்பலான பகுதிகளில் குளம் போல மழைநீர் தேங்கி நிற்பதும், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதும் சென்னை மாநகராட்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகிறது. பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்துவதில் சென்னை மாநகராட்சி செலுத்தும் கவனத்தை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் செலுத்தியிருந்தால், இந்தளவிற்கு பாதிப்பை சந்தித்திருக்க முடியாது என பொதுமக்கள் தங்களின் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதும், அறிவிப்புகளை வெளியிடுவதும் எந்த வகையிலும் பலனளிக்காது என்பதை இனியாவது உணர்ந்து, முழுமையான களப்பணியில் ஈடுபட்டு மழை, வெள்ளத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அரசியல் எதிரிகளையும், நம்பிக்கைத் துரோகிகளையும் அடியோடு வீழ்த்தி இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க தொடங்கப்பட்ட நம் கழகத்தின் பொருளாளராகவும், போர்ப்படை தளபதியாகவும் திகழ்ந்த எனது அருமை நண்பர் திரு.வெற்றிவேல் அவர்களின் நினைவுதினம் இன்று. தடைகளையும், எதிர்ப்புகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு தான் கொண்ட கொள்கையிலும், லட்சியப் பயணத்திலும் இறுதிவரை உறுதியாக இருந்த அருமை நண்பர் திரு.வெற்றிவேல் அவர்கள் கழகத்திற்காக ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்வோம்.

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தினபூமி நாளிதழின் உரிமையாளர் திரு.மணிமாறன் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.மணிமாறன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திரு.மணிமாறன் அவர்களின் மகன் திரு.சதீஷ் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்பிட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பருவமழை பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுதினம் தொடங்கும் என அறிவித்திருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை, கோவை, மதுரை, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும் போது நடப்பாண்டு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்திருக்கும் நிலையில், கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளும், அவரவர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களே அரசு நிர்வாகத்தின் தோல்வியையும், திறமையின்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதுகாப்போடு இருப்பதோடு, அவரவர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற அடிப்படை உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட போதுமான உதவிகளை செய்திடுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம்பருப்புக்கு கடும் தட்டுப்பாடு – ஒப்பந்த நிறுவனங்களுக்கு சலுகையை வழங்கி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் தமிழக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு துவரம்பருப்பு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், ஒப்பந்தத்தின் படி உரிய நேரத்தில் துவரம்பருப்பை விநியோகம் செய்யாமல் காலம் தாழ்த்துவதே நியாயவிலைக்கடைகளில் தட்டுப்பாடு நிலவ முக்கிய காரணம் என கூறப்படுகிறது. நியாயவிலைக்கடைகளில் வழங்கபடும் சர்க்கரையின் அளவு உயர்த்தி வழங்கப்படும், நிறுத்தப்பட்ட உளுத்தம்பருப்பு மீண்டும் விநியோகம் செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதிகளை தற்போதுவரை நிறைவேற்றாத திமுக அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த துவரம்பருப்பையும் முறையாக வழங்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் படி 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம்பருப்பை கொள்முதல் செய்வதற்கு பதிலாக தரம் குறைந்த கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு இயற்கையானதா ? அல்லது கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கை தட்டுப்பாடா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகையை கருத்தில் கொண்டு ஒப்பந்தம் வழங்கிய நிறுவனங்களிடமிருந்து உரிய துவரம்பருப்பை கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஊடகத்துறையில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 31 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ராஜ் குழும தொலைக்காட்சிகளுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு கோணங்களில் கிடைக்கும் செய்திகளை அதன் உண்மைத் தன்மை மாறாமல் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தலை சிறந்த செய்தி தொலைக்காட்சியாகவும், பாரம்பரியமிக்க நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் ராஜ் குழும தொலைக்காட்சிகளின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. மக்களின் பிரச்னைகளை மட்டுமே கூறிவிட்டு கடந்து செல்லாமல் அதற்கான தீர்வையும் நோக்கி பயணிக்கும் ராஜ் தொலைக்காட்சி, எந்தவித விருப்பு வெறுப்புமின்றி தொடர்ந்து நடுநிலையோடு பயணித்து மென்மேலும் பல சாதனைகள் படைக்க மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.