May 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பத்ம விபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானியுமான திரு எம்.ஆர்.சீனிவாசன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தலைசிறந்த ஆராய்ச்சிகளின் மூலம் இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி திரு எம்.ஆர். சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
May 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு – போதிய மருத்துவர்கள் இல்லாமல் இயங்கும் அரசு மருத்துவமனைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்.மதுரை மாவட்டம் வளையங்குளத்தில் நேற்று பெய்த கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு வளையங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அம்மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்தவர்கள் அடுத்தடுத்த மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.வளையங்குளம் மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கே மூவரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
May 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் – உரிய ஆய்வை மேற்கொண்டு உடனடியாக இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல, விழுப்புரம், செங்கல்பட்டு, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் மழைநீரில் நனைந்து வீணாகியிருக்கும் செய்திகளும் மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் விவசாய நிலங்களிலும், நெல் கொள்முதல் நிலையங்களிலும் எவ்வித பயனுமின்றி சேதமடைந்து கிடப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்திருக்கிறது. எனவே, தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களின் விவரங்களை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
May 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? – ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் ஊதியக்குழுக்களின் தவறான நிர்ணயத்தால் பணியில் இருந்து ஓய்வு பெற பத்தாண்டு காலம் மீதமிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்ட தொடர் போரட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இடைநிலை ஆசிரியர்களின் ஒவ்வொரு போராட்டத்தின் போதும், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும், பின்னர் ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைப்பதும் என எந்தவித தீர்வையும் காணாமல் தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவது ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் திமுக அரசு இழைக்கும் அநீதி ஆகும். எனவே, ஆண்டு ஊதிய உயர்வில் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஆண்டுக்கணக்காக போராடி வரும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
May 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவா? – ஆட்சிக்காலம் முடிவடையும் முன்பே மக்களை ஆண்டியாக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறதா திமுக அரசு ?தமிழகத்தில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வீட்டு மின் நுகர்வோர், வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பின் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் ஏழை, எளிய சாமானிய மக்கள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் கடுமையாக பாதிப்படைந்து வரும் நிலையில், தற்போது மேலும் 3.16 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வின் மூலமாக மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும் நிலையில், மேலும் மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் என கூறுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஏற்கனவே, ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வின் மூலம் கிடைக்கும் வருவாய் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுந்திருப்பதோடு, தற்போது தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகளும் மின்வாரியத்தின் செயல்பாடுகளை சந்தேகத்திற்கு உள்ளாக்குகின்றன.எனவே, தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
May 17, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை உசிலம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள் தோல்வி – தாய்மொழி தமிழை பயிற்றுவிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்கத் தவறிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 9 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, தற்போது தாய்மொழியாம் தமிழ் பாடத்திலேயே 9 மாணவர்கள் தோல்வியடையும் சூழலை உருவாக்கியுள்ளது. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும், வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும், அரசாணைகளை தமிழ் மொழியிலேயே வெளியிட வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்ட முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுப்பள்ளிகளில் தமிழ் பாடத்தை பயிற்றுவிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்கத் தவறியது ஏன்? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. எனவே, தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்த 9 மாணவர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கி துணைத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதோடு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
May 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ, மாணவியர்கள் நடைபெற்று முடிந்த தேர்வு முடிவையே இறுதியாக கருதாமல் அடுத்தடுத்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று தங்களின் எதிர்கால இலக்குகளை அடைய வாழ்த்தி மகிழ்கிறேன்.
May 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
May 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேராசிரியர் பற்றாக்குறையால் அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகள் – தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை கேள்விக்குறியாக்கும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பேராசிரியர்கள் பற்றாக்குறை, குறைவான வருகைப்பதிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய கால அவகாசத்திற்குள் 24 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தை வழங்க தவறியிருப்பதால் அக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பிருப்பதோடு அக்கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வும் மாணவர் சேர்க்கையும் நடத்துவதில் சிக்கல் நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் மருத்துவமனை கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கும் தேசிய மருத்துவ ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கண்டறியப்படும் குறைபாடுகள் தமிழக சுகாதாரத்துறையின் சுகாதாரமற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கத் தவறியதே மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கக் காரணம் என மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தேசிய மருத்துவ ஆணையம் கோரிய விளக்கத்திற்கு உரிய பதில் உடனடியாக அளிப்பதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
May 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் வயதான தம்பதியினர் படுகொலை – கொலைக் குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியமாக செயல்படும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அண்மைக்காலமாகவே தனியாக வசித்து வரும் முதியவர்களை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத திமுக அரசால் தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பல்வேறு தனிப்படைகளை அமைத்தும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வரும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, சேலத்தில் வயதான தம்பதியினர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.