இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இலங்கை கடற்படையினர் ஒருபுறமும் அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் மறுபுறமும் தொடர் தாக்குதல் நடத்தி படகுகளையும் உடமைகளையும் பறிமுதல் செய்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மீனவர்கள் கைது விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழாத வண்ணம் நிரந்தர முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

தன் வாழ்நாளில் பெரும்பாலான பகுதியை இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த குடியரசு முன்னாள் தலைவர், ஏவுகனை நாயகன் பத்மபூஷன் திரு.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. நல்ல பழக்கவழங்கங்கள் நமது எதிர் காலத்தை மாற்றும் எனவும் கனவு காணுங்கள்… ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் நாடு முழுவதும் மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அக்னி, பிருத்வி, பிரமோஷ் என அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் படைப்புகள் அனைத்தும் இன்றளவும் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நல்வழியை காட்டும் அப்துல்கலாமின் லட்சியப் பாதையில் சென்று அவரது கனவான வளமான இந்தியாவை உருவாக்குவோம் என அவர் பிறந்த இந்நாளில் உறுதியேற்போம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஆயக்குடி அருகே தொடர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வி.ஏ.ஓ திரு. கருப்பசாமி மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது மணல் கடத்தலில் ஈடுபட்ட சிலர் லாரியை ஏற்றி கொலை முயற்சி செய்ய முற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டின் வி.ஏ.ஓ கொலை செய்யப்பட்டதன் சுவடே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் ஒரு கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியதாக வரும் செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எடுத்துக்காட்டாக அமையும் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் 83 இடங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளின் படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட 800க்கும் அதிகமான இடங்களில் 83 மருத்துவ இடங்கள் நிரப்பபடாமலே இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 4 கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்த பிறகும் 83 மருத்துவ இடங்கள் நிரப்பபடாமல் இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும் அவை நிரப்பப்படாத காரணத்தினால் ஏழை, எளிய மாணவர்கள் பலர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப் படாமல் இருக்கும் காலியிடங்களைத் திரும்ப வழங்க மாட்டோம் என உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாட்டிற்கான 83 மருத்துவ இடங்கள் மீண்டும் கிடைப்பதை உறுதி செய்வதோடு, வரும் காலங்களில் இதுபோன்று நிரப்பபடாமல் இருக்கும் மருத்துவ இடங்களை முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு படித்துவந்த மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சிறைவாசிகளின் விடுதலைக்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் அளிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளையொட்டி 20 இஸ்லாமியர்கள் உட்பட 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் அவர்கள் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என முதலமைச்சர் கூறியிருக்கிறார். அரசின் பரிந்துரையை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்ததுடன் தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் கொடுத்து 49 சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான ஒப்புதலைப் பெறுவதோடு, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஆதிநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.