எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தபோதிலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடிக்கும் கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா? டெல்லி சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவேன் என டெல்லி முதலமைச்சர் சொந்த மாநிலத்தின் நலனுக்காக குரல் கொடுத்ததைப் போல திமுக தலைவர் குரல் கொடுக்கத் தவறியது ஏன்? எப்போதுமே தமிழ்நாட்டின் மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டு சொந்த நலனுக்காகவே சிந்திக்கும் திமுக தலைவர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவாரா? பெங்களூரு விமானநிலையத்துக்கே வந்து தன்னை வரவேற்ற துணைமுதலமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாரிடம் மரியாதை நிமித்தமாகவாவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கோரிக்கைவைக்கத் தவறியது ஏன் ? குறுவை சாகுபடிப் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று டெல்டா விவசாயிகள் தவிப்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூட்டணி விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பியிருக்கும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவது கண்டிக்கத்தக்கது.

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திரு.உம்மன் சாண்டி காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அண்டை மாநில முதல்வர் என்ற வகையில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் நட்பு கொண்டிருந்தவர் உம்மன் சாண்டி அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைச் சந்தித்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று விரும்பியவர். காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி அவர்களின் மறைவு கேரள மாநில மக்களுக்கு மட்டுமின்றி, தென்மாநில மக்களுக்கும் பேரிழப்பாகும். உம்மன் சாண்டி அவர்களை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தமிழ் மொழியை உயிர் மூச்சாக கொண்டிருந்த மறைமலை அடிகளார் அவர்களின் பிறந்த தினம் இன்று. தனித் தமிழ் இயக்கத்தை தொடங்கி வழிநடத்திய முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த மறைமலை அடிகளார் அவர்கள் கல்வியாளராகவும், பத்திரிகையாளராகவும் அறியப்பட்டவர். தமிழ் மொழி பற்றுடன் திகழ்ந்த மறைமலை அடிகளார், பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய நடையில் உரை எழுதியவர். தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தமிழர்களுக்கு ஆங்கில புலமையும் அவசியம் என்பதை வலியுறுத்தியவர். மறைமலை அடிகளாரின் வழியை பின்பற்றி மொழி ஆற்றலுடன் திகழ்வதுடன், அன்பு, அறத்தை கடைபிடித்து வாழவும் இந்நாளில் உறுதி ஏற்போம்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும்,தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி திரு.வீர முத்துவேல் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருவது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவ தரைப்பரப்பில் தண்ணீர் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் இலக்கு வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தியா மேற்கொண்டுள்ள சந்திரயான் 3 திட்டத்தின் விண்வெளிப்பயணம் அதன் இலக்கை அடைவதுடன் நிலவு குறித்த சர்வதேச நாடுகளின் ஆராய்ச்சியில் இந்தியா முதன்மை பெறவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாகும்.

டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி, நிரந்தர மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் உரத்தக் குரல் எழுப்பிவரும் இச்சூழலில், டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது என்பது மக்களை குடிபோதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவதற்குச் சமமாகும். கூலி வேலைக்கு செல்வோர் உட்பட கடின வேலை செய்பவர்களுக்காக காலை நேரத்திலேயே மதுக்கடைகளை திறப்பது என்பது நியாயமா? ஏற்கனவே, தமிழ்நாட்டில் மது போதையினால் வேலைத்திறன் வெகுவாக குறைந்து வருவதை அரசு உணர்ந்துள்ளதா? ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் நேரத்தில் பரப்புரை செய்துவிட்டு, அதற்கு மாறாக நாள் முழுவதும் மதுக்கடைகளை திறக்க முயல்வது ஏற்புடையதல்ல. ஆகவே, மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதும், மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மதுவிற்கு அடிமையானோரைக் கண்டறிந்து மறுவாழ்வு முகாம்களில் சிகிச்சை அளித்து அவர்களை மீட்டெடுப்பதே தற்போதைய தேவையாக இருக்கும். அதை விடுத்து, மதுவை 90 ML பாக்கெட்களில் விற்றாலோ மற்றும் வேலைக்கு மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் மதுபானக் கடைகளைத் திறந்தாலோ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களைத் திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பருவம் தப்பி பெய்த கனமழை காரணத்தினால் உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனமழை காரணமாக உப்பு பாத்திகளில் இருந்து உப்பு அறுவடை செய்ய முடியாததால் உப்பளத்தை சார்ந்த சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி, சரக்கு லாரிகளை நம்பி இருக்கும் ஓட்டுநர்கள், தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயிர்காப்பீடு போல உப்பள காப்பீடு திட்டம் செயல்படுத்தி இத்தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை முழுமையாக மதிப்பீடு செய்து உப்பள உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் வாழ்வாதாரம் இழந்துள்ள உப்பள தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.