மருத்துவமனைகளில் நோயாளிகளை மருந்துகளோடும், மாத்திரைகளோடும் மட்டுமின்றி அன்பாலும், புன்னகையாலும் அக்கறையோடு கவனித்து குணம்பெற செய்யும் அனைத்து செவிலியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். கொரோனா போன்ற பல்வேறு கொடிய உயிர் கொல்லி நோய் தொற்று காலகட்டம் மட்டுமின்றி அனைத்து தருணங்களிலும் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் மருத்துவ சுகாதார கட்டமைப்பில் முக்கிய அங்கமாக, அர்ப்பணிப்பு மிக்கவர்களாக செவிலியர்கள் திகழ்கின்றனர். அவ்வாறு மருத்துவர்களுக்கு இணையாக முன்களப்பணியாளர்களாக பல்வேறு சூழ்நிலைகளில் பணியாற்றிடும் செவிலியர்கள் பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். ஆகவே நம் உயிர்காக்க தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளை ஆளும் திமுக அரசு செவிமடுத்து கேட்டு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலக் கல்விக் கொள்கைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு. ஜவஹர் நேசன் அவர்கள் பதவி விலகியதன் மூலம் மத்திய அரசின் கல்விக்கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என கூறி மாநிலக் கல்வி கொள்கை குறித்து ஆராய்வதாக திமுக அரசு மேற்கொண்ட இரட்டை வேடம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வெளியான உடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல நடித்த திமுக அரசு, சில மாதங்கள் கழித்து அதற்கு இசைவாக 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வு முறையில் மாற்றங்களை மேற்கொண்டபோதே அதற்கு அமமுக எதிர்ப்புத் தெரிவித்தது. மாநிலக் கல்வி கொள்கை குழுவில் இருந்து விலகியுள்ள திரு. ஜவஹர் நேசன் அவர்கள், கார்ப்பரேட் கல்விக்கொள்கையையே மாநில கல்விக்கொள்கையாக மாற்றும்படி அதிகாரிகளைக் கொண்டு திமுக ஆட்சியாளர்கள் மிரட்டுவதால் ராஜினாமா செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தேசிய கல்விக்கொள்கை 2020-ன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது என்றும், இந்நிலை நீடித்தால், தமிழ்ச் சமூகத்தின் உயரிய விழுமியங்களுக்கு எதிராக கல்வி கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுவதாக பேராசிரியர் திரு. ஜவஹர் நேசன் அவர்கள் கூறியிருப்பதை புறந்தள்ளி விட முடியாது. திராவிடமாடல், மாநில சுயாட்சி, மாநில உரிமை என்று உதட்டளவில் மட்டுமே திமுக அரசு பேசி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணமாக மாநில கல்விக்கொள்கை விவகாரத்தில் திமுக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இனியும் திமுக அரசு மக்களை ஏமாற்றாமல் தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் வெளிப்படையான முடிவை அறிவிக்க வேண்டும். மாநில கல்விக்கொள்கை குழுவை சீரமைத்து குழுவில் உள்ளோர் சுதந்திரமாக முடிவு எடுக்க அனுமதித்து, மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணியில் இருந்த நாகலட்சுமி, ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் ஆனநிலையிலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாகலட்சுமியின் ஐந்து குழந்தைகளும் கணவரும் ஆதரவற்ற நிலையில் உள்ள சூழலில், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி வாய்கிழிய பேசும் திமுக அரசு, நாகலட்சுமிக்கு ஆட்சியர் வழங்கிய பொறுப்புக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீதும், நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்துக்கு உரிய சட்ட உதவிகளை செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்.

ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்த வகை செய்யும் அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தங்களை பணி நியமனம் செய்ய வேண்டுமானால் மேலும் ஒரு தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தும் அரசாணை கடந்த 2019ஆம் ஆண்டு பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் இந்த அரசாணையை எதிர்த்ததை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பணி நியமன போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 முறை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போதும் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதமிருக்கும் ஆசிரியர்களை தமிழக அரசின் சார்பில் இதுவரை அழைத்து பேசாததைக் கண்டிப்பதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால், கோடை விடுமுறைக்கு மக்கள் வெளியூர்களுக்கு பயணிக்க முடியாமல் திண்டாடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான ஓட்டுநர்கள் பணிஓய்வு பெற்றதாலும், பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் தயாராக இருந்தாலும் உரிய முறையில் அவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்படாததால் பெரும்பாலான பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேநேரம் போக்குவரத்துறையின் நிர்வாக குளறுபடியால் போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டமடைந்திருப்பதாகக் கூறி பேருந்து சேவையை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக ஆளும் கட்சியின் தொழிற்சங்கமே குற்றஞ்சாட்டி இருப்பதும், தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் பேருந்து சேவை குறைக்கப்பட்டிருப்பது தனியாருக்கு தாரைவார்க்கும் முன்னோட்டமோ? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே போக்குவரத்து துறையில் முறைகேடுகளைக் களைந்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதுடன், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், பேருந்துகளை இயக்க பாரபட்சமின்றி பணி வாய்ப்புகளை வழங்கி பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா அவர்களின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பழனிசாமி ஆட்சியில் கோவையில் போடாத 16 ரோடுகளுக்கு ரூ.1.98 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வரும் செய்திகளை விசாரித்து, ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் மீது முதலமைச்சர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பல ஆண்டுகளாக பழுதாக இருந்த சாலைகளை புதுப்பிக்க நிதி ஒதுக்கிய பின் அந்த நிதியைக்கொண்டு வேறு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த முறைகேடு அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அதனை மாவட்ட ஆட்சியரும் உறுதி செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. உப்புத்தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று எதுகை மோனையில் வீடியோ வெளியிடும் முதல்வர், தனது ஆட்சியின் கீழ் பணி செய்யும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்த முறைகேட்டை மூடி மறைத்து ஊழலுக்குத் துணை போயுள்ளனர் என்பதை அறிவாரா? கடந்த ஆட்சியில் ஊழல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த விடியா அரசு, கடந்த கால ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டு மற்றொரு முறைகேடு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா? என்ற மக்களின் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்!

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.