கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாவது சிப்காட் அமைக்க சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது வாழ்வாதாரத்தின் ஆதாரமாக விளங்கும் விவசாய நிலங்கள் பறிபோன கவலையில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளில் மேலும் இருவர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் 150 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தபோதிலும் திமுக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் இன்று வரை வேடிக்கை பார்த்துவருவது கண்டிக்கத்தக்கதாகும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளின் காவலராக காட்டிக் கொண்ட முதலமைச்சர், ஆட்சிக்கு வந்தபின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமான நிலையம், சேலம்-சென்னை பசுமை வழி சாலை, சூளகிரியில் 3ஆவது சிப்காட் அமைத்தல் ஆகியவற்றுக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் மனம் போன போக்கில் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாற்றுகின்றனர். விவசாய நிலத்தில் வைரமே கிடைத்தாலும் அதனை எக்காரணம் கொண்டும் அழிக்கக் கூடாது என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. ஆகவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3ஆவது சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 250 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆம்புலன்ஸ்களில் பிரதமர் படத்தை ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படத்தை ஒட்டுவதா என்ற சர்ச்சையாலும், ஆம்புலன்ஸ்களை இயக்க ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதாலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களில் யாருடைய படத்தை ஒட்டுவது என்பதை சர்ச்சையாக்காமல், அவற்றை இயக்க போதுமான ஆட்களை நியமித்து ஆம்புலன்ஸ்களை உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை-கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்துக்குள்ளானதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மேலும் இரண்டு ரயில்கள் இந்த கோரவிபத்தில் சிக்கியதால் அதிக உயிரிழப்புகளும், 900க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் நிலை குறித்து அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

தாய்ப்பாலுக்கு இணையாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் உரிய நேரத்தில் கிடைக்காததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக தவித்து வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் பால்பண்ணைகளுக்கு வரவேண்டிய பால் வரத்தில் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான ஆவின் பால் விநியோகத்தில் தொடர்ந்து பல மாதங்களாக குளறுபடி நிலவுவது மறைமுகமாக தனியார் பால் விற்பனையை அரசே ஊக்கப்படுத்துவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, பால் கொள்முதலை அதிகரித்து, பால் விநியோகத்தை சீரமைப்பதே இப்போதைய அவசரத்தேவையாகும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி, உடனடித் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். டி.கே.சிவக்குமாரின் அறிவிப்புக்கு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வெறுமனே கண்டனம் மட்டுமே தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இரு மாநில நலன்களுக்கு மாறாக கர்நாடகா அரசு பேசி வருவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் அனுமதியின்றி காவிரிக்கு குறுக்கே தன்னிச்சையாக அணை கட்ட முடியாது. ஆனால், கர்நாடகாவில் இருக்கும் அரசுகள் அதனை தொடர்ந்து மீறி வருவது இரு மாநில உறவுகளுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக மக்கள், விவசாயிகள் நலன் காக்கவும் உடனே முதலமைச்சர் தலையிட்டு கர்நாடகா அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசுடன் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று இடங்களில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது மணல் கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை தி.மு.க அரசு கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ. கொல்லப்பட்டு ஒரு மாத காலம் ஆன நிலையிலும் கூட, இத்தகைய தாக்குதலில் ஈடுபடும் ஆளும் கட்சியினர் மீது வெறுமனே கைது நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமே தீர்வாகாது. ஆளுங்கட்சியினர் என்ற அடையாளத்துடன் மணல் கடத்தலில் ஈடுபடுவதையும், தடுப்போர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்துவதையும் கட்சித் தலைவர் என்ற முறையில் திரு.ஸ்டாலின் கண்டித்து, இனிவரும் காலங்களில் இத்தகயை சம்பவங்கள் நடைபெறாதவாறு இருக்க அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் உள்ளிட்ட இயற்கை வளங்ககளை கடத்துவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில்,‌ மும்முறை நீளம் தாண்டுதலில் ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த செல்வ பிரபு இந்தியாவிற்காக சாதனை படைத்திருப்பதை பெருமிதத்துடன் பாராட்டுகின்றேன். இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் 2023 Asian Athletics Championships போட்டிக்கு தகுதி பெற்றுள்ள செல்வ பிரபு, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை பெறவும் வாழ்த்துகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.