எளிய குடும்பத்தில் பிறந்து, கடைக்கோடி தொண்டனாக அரசியலில் இணைந்து, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவருமான முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டு, தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான பெண் கைதி தாக்கியதில் சிறை தலைமைக் காவலர் படுகாயம் – புழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், அங்குக் கண்காணிப்பு பணியிலிருந்த சிறை தலைமைக் காவலர் படுகாயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே புழல் சிறையில் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் எழுந்த புகாரைக் கண்டுகொள்ளாத சிறைத்துறையால் தற்போது சிறை தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் வழங்கியிருக்கும் அபரிவிதமான சலுகைகளே இதற்குக் காரணம் எனச் சிறைக்காவலர்கள் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி அதற்கான தண்டனையை அனுபவிக்கப் புழல் சிறைக்கு வரும் கைதிகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாகச் சுற்றித் திரிவதால், அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நாங்கள் கைதிகள் போல அடைக்கப்பட்டிருப்பதாகச் சிறைக்காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சிறைத்துறை மீது எழுந்திருக்கும் புகாரை விசாரணைக்கு உட்படுத்துவதோடு, புழல் சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறைக்காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்பு – தீயணைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவசிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும்.சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து மும்பைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சரக்கு ரயிலில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகை திருவள்ளூர் ரயில் நிலையத்தைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட ரயில் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புதல்வன் திரு.லட்சுமணன் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேசிய பாரா கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கடின பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கும் திரு.லட்சுமணன் அவர்களின் சாதனைப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

அரசுப்பள்ளி மாணவர்களை மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து படிக்க வைப்பது தான் திராவிட மாடல் அரசின் பெருமையா? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிக்கும் காணொளி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, வகுப்பறைகள் பற்றாக்குறை போன்ற அடிப்படை வசதியின்மை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதாக புகார் எழுந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து கல்வி பயில்வதை பார்க்கும் போது ஆண்டுதோறும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது. அடிப்படை வசதிகள் தொடங்கி ஆசிரியர்கள் பற்றாக்குறை வரை அரசுப்பள்ளிகளில் நிலவும் அவல நிலையில் மாணவர்கள் ஒருபுறம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வித்துறை விளம்பரம் செய்து கொண்டிருப்பது வெட்கக்கேடானது. எனவே, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அரசுப்பள்ளிகளின் உண்மை நிலையை அறிந்து, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய பகுதிநேர ஆசிரியர் வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் மரணம் – குடும்பத் தலைவரை இழந்து நிர்கதியில் நிற்கும் ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியது திமுக அரசின் கடமை. பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.பார்த்தசாரதி அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சாலை விபத்தில் மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர் திரு.பார்த்தசாரதி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ஆசிரியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் போனஸ், ஊக்கத்தொகை, மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எந்தவித சலுகையுமின்றி பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்ற தொடர்ந்து மறுத்துவருவது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி, தையல், கணினி அறிவியல் என பல்வேறு பாடங்களை கற்பித்து மாணவர்களின் தரத்தை உயர்த்தும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால், தொடர் போராட்டங்களையும், ஆசிரியர் ஒருவரின் உயிரிழப்பையும் தவிர்த்திருக்கலாம் என சக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், பணி நிரந்தரம் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்காத காரணத்தினால், தற்போது உயிரிழந்த ஆசிரியர் திரு பார்த்தசாரதி அவர்களின் மறைவுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணமும், பணப்பலன்களும் இன்றி அவரது குடும்பம் நிர்கதியில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் திரு பார்த்தசாரதி அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சக ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை மனசாட்சியோடு அணுகி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.